மீண்டும் ஜனாதிபதியாக மாற சந்திரிக்கா, மஹிந்தவுக்கு வாய்ப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் போட்டியிடுவதில் சட்ட சிக்கல் இல்லை என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என சில சட்ட வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகள் மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவது தடை செய்யப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக மூன்றாவது முறையாக எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த சட்டத் திருத்தமானது கடந்த காலத்திற்கு பொருந்தக்கூடியதல்ல என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, 19ம் திருத்தச் சட்டமானது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரும்பினால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், இந்த விடயம் குறித்து உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரப்பட வேண்டுமெனவும், எதிர்காலத்தில் வாக்காளர் ஒருவரினால் சட்ட விளக்கம் கோரப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.