ஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்!!

ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார்.

இந்தத் தகவலை வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்தவாரம் முதல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாகன பேரணி ஒன்று நடாத்தப்பட்டு தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

வடமாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணாண்டொ தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் பின்னர் நடைபெற்ற முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை நடத்தினார். இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“தொலைபேசி இலக்கத்திற்கு யாழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கணிசமான முறைப்பாடுகளும் தகவல்களும் இதன் மூலம் எமக்கு கிடைத்துள்ளது.

குறிப்பாக தாய் ஒருவர் அண்மையில் தொடர்புகொண்டு தனது மகன் ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்தார்.

மகனைக் காப்பாற்ற தான் முயன்றும் முடியாது போனதாக அந்தத் தாயார் தெரிவித்தார். எப்படியாவது தனது மகனை அந்த குழுவிலிருந்து காப்பாற்றி தம்முடன் ஒப்படைக்குமாறும் அவர் முறைப்பாடு வழங்கினார்.

இது போன்ற பல தகவல்கள் எமக்கு கிடைத்து வருகின்றன. அவற்றை இரகசியமான முறையில் விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளோம்” என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.