போதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை!

மதுபோதையில் வாகனம் ஓட்டியதுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்களுக்கு போக்குவரத்தை சீர்செய்ய சொல்லி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 28 ஆம் தேதி கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது,

இரு சக்கர வாகனத்தில் அவ்வழியே வந்த வடவள்ளி கல்வீரம்பாளையத்தைச் சேர்ந்த சுதர்ஷன் என்ற இளைஞர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

அப்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது காவலர்களிடம் சுதர்ஷன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தான் பெரிய ஆளு என்றும் முக்கிய பிரமுகர்களை தெரியும் என்றும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர்களை மிரட்டவும் செய்தார்.

இது தொடர்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் ரத்தினபுரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அவரை பிடித்து விசாரித்ததில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுதர்ஷன் என தெரிந்தது. உடனே அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து தான் செய்தது தவறு என்றும் காவலர்களின் பணி குறித்தும் அவர் வருத்தத்துடன் பேசிய வீடியோ, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஆகியவை சமூக வலைத்தளங்களில் பரவியது.

தொடர்ந்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், விபத்து ஏற்படுத்தும் விதமாகவும், குடிபோதையில் வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் கடந்த 16 ஆம் தேதி சுதர்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலருக்கு உதவியாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஈடுபடவும் நூதன முறையில் நீதிமன்றம் நிபந்தனை அளித்ததை அடுத்து, தனது பணியை சுதர்சன் துவக்கியுள்ளார்.

நீதிமன்றம் இதுபோன்று நிபந்தனை வழங்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like