புதிதாக எழுதப்படுமா போர் வரலாறு?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போரை முறையாக ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. கடந்த வாரம் ஆங்கில வார இதழ் ஒன்று தான் இதுபற்றிய தகவல்களை வெளிப்படுத்தியிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் முன்னாள் படைத் தளபதிகள் கடந்த 6ம் திகதி இரவு ஒரு இரகசிய சந்திப்புக்குச் சென்றிருந்தனர். அந்தச் சந்திப்பு பற்றியோ அதில் பேசப்பட்ட விடயங்கள் பற்றியோ வெளியில் எந்தத் தகவல்களும் வெளியிடப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

முன்னாள் இராணுவத் தளபதிகள் ஜெனரல் ஜெரி டி சில்வா, ஜெனரல் லயனல் பலகல்ல, முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி மற்றும் எயார் சீவ் மார்ஷல் பத்மன் மென்டிஸ், முன்னாள் கடற்படைத் தளபதிகள் அட்மிரல் தயா சந்தகிரி, அட்மிரல் பசில் குணசேகர, அட்மிரல் சிசில் திசேரா மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள், பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட 25 பேர் வரை அந்தச் சந்திப்பில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் இந்தக் கூட்டத்தில் இரண்டு முக்கியமானவர்கள் பங்கேற்கவில்லை. ஒருவர் இறுதிக்கட்டப் போரில் இராணுவத் தளபதியாக இருந்து வியூகங்களை வகுத்து தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. இன்னொருவர் புலிகளுக்கு எதிரான போருக்கு அரசியல் ரீதியான ஆதரவை உறுதிப்படுத்தி போரை ஒருங்கிணைத்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.

கோத்தபாய ராஜபக்ச இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். அதனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அவரால் இதில் பங்கேற்றிருக்க முடியாது. ஆனால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாட்டில் இருந்தாலும் அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சரத் பொன்சேகாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சரியான உறவுகள் இல்லை. இதனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதா அல்லது சரத் பொன்சேகாவே அழைப்பை புறக்கணித்தாரா என்று தெரியவில்லை.

எது எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போர் பற்றிய ஒரு முழுமையான வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆனால் அதற்காக அவர் கையாள முற்பட்டுள்ள வழிமுறைகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்படி சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போர் பற்றிய உண்மையான சம்பவங்களைக் கொண்டதாக வரலாற்று ஆவணம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

போர் முடிந்த பின்னர் இராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் போர் வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார்கள்.

கோத்தாவின் போர் என்ற பெயரில் சிங்கள ஊடகவியலாளர் சந்திர பிரேமவும் ஒரு நூலை எழுதியிருக்கிறார். இவ்வாறான நூல்களின் பின்னணி போரின் உண்மையான பரிமாணத்தை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக சிலரை கதாநாயகர்களாக காட்டும் முயற்சியாகவே இருப்பதாக எழுந்திருக்கும் விமர்சனங்கள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நந்திக்கடலுக்கான பாதை என்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நூல் அவர் தன்னை இலங்கை இராணுவத்தின் ரம்போவாக காண்பிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்றும் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான மிகையான அல்லது பக்கச் சார்பான தகவல்களில் இருந்து விலகி ஒரு முறையான வரலாற்று நூலை எழுதும் முயற்சியாகத்தான் முன்னாள் இராணுவத் தளபதிகளைச் சந்தித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று கூறப்படுகிறது.

அவ்வாறான ஒரு முழுமையான வரலாற்றை எழுதுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்தால் பக்கச் சார்பற்றதாக எல்லாத் தரப்பு விடயங்களையும் உள்ளடக்கிய நடுநிலையான ஒன்றாக அதனை வெளியிட எண்ணினால் அது சர்வதேச அளவில் வரவேற்புக்குரிய ஒன்றாக இருக்கும்.

ஏற்கனவே இலங்கையில் வரலாற்றை ஒட்டியதாக எழுதப்பட்ட மகாவம்சம், சூளவம்சம், தீப வம்சம் ஆகியவற்றிலும் சரி கோத்தாவின் போர் நந்திக்கடலுக்கான பாதை ஒரு போர் வீரனின் பதிப்பு, கடலில் சமர் சீரற்ற போர்முறை, அதிர்ஷ்டானய போன்ற போர் வரலாறு தொடர்பான நூல்களிலும் சரி ஒருபக்க வரலாறு அல்லது பக்கச்சார்பான தகவல்கள், தரவுகள் தான் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் வரலாற்றைப் பதிவு செய்வதில் சிங்கள மன்னர்கள் தொடக்கம் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன வரையிலான ஆட்சியாளர்கள் உறுதியாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.

மகாவம்சத்தின் இணைப்பாக 1978 தொடக்கம் 2010 வரையான காலத்தில் வரலாற்றை ஆவணப்படுத்தும் பணி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடக்கம் பிரேமதாச, டி.பி.விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலங்களில் வரலாற்றை அந்த இணைப்பில் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார் மகிந்த ராஜபக்ச.

ஆனால் அந்த வரலாற்று ஆவணத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இடமளிக்கப்படவில்லை. சரத் பொன்சேகா என்ற பெயருடைய ஒரு இராணுவத் தளபதி இலங்கையில் இருந்தார் என்ற பதிவைக் கூட விட்டுச் செல்ல மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை.

இவ்வாறாக தமக்குச் சாதகமான வரலாற்றை எழுத முற்பட்டதால் தான் சிங்கள மன்னர்கள், தளபதிகள், ஆட்சியாளர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் எல்லோரதும் அங்கீகாரத்தைப் பெற முடியாததாக இருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது முன்னெடுத்திருக்கின்ற போர் வரலாற்றைந ஆவணமாக்கும் முயற்சியும் கூட நியாயமானதாக பக்கச் சார்பற்றதாக எழுதப்படுமா என்ற கேள்விகள் உள்ளன.

இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய சரத் பொன்சேகாவோ கோத்தபாய ராஜபக்சவோ பங்கேற்காத கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டதும் இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த முன்னாள் இராணுவத் தளபதிகள் எவரும் சந்திப்புக்கு அழைக்கப்படாததும் இந்தச் சந்தேகங்களை எழுப்ப வைத்திருக்கிறது.

அதைவிட போர் வரலாறு எனும் போது இலங்கை இராணுவத்தின் உண்மையான போர் வரலாற்றை எழுத வேண்டுமானால் அதன் உண்மையான பிம்பத்தை வெளிப்படுத்த வேண்டுமானால் விடுதலைப் புலிகளின் உண்மையான வரலாறும் வெளிப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

எதிரியின் பலத்தை சரியாக வெளிப்படுத்துவது தான் ஒரு இராணுவத்தின் பலத்தையும் வீரத்தையும் உண்மையாக வெளிக்கொண்டு வரும். விடுதலைப் புலிகளை எதிரியாக கொண்டதால் தான் இலங்கை இராணுவத்துக்கு சர்வதேச புகழ் கிடைத்தது.

அந்தளவுக்கு புலிகளின் வீரமும் பலமும் இருந்தது. அதனை சரியாக மதிப்பிடாமல் தெளிவாக குறிப்பிடாமல் வரலாறு எழுதப்பட்டால் அது ஒருபோதும் நியாயமானதாக உண்மையானதாக பக்கச் சார்பற்றதாக ஏற்றுக்கொள்ளப்படாது.

அது மாத்திரமன்றி இந்தப் போரில் இலங்கை இராணுவம் மிகப் பெரியளவிலான போர்க்குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த நேர்மையான பதிவுகளையும் அதற்கான பதில்களையும் கூட வரலாற்று ஆவணம் கொண்டிருந்தால் தான் அது உண்மையானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

அதேவேளை போரில் வெற்றியைப் பெற்ற தரப்பான அரச படைகளிலுள்ள அதிகாரிகளும் அரசாங்கமும் போர் தொடர்பான வரலாற்று ஆவணங்களை அதிகளவில் வெளியிட்டு வருகின்ற நிலையில் ஏராளமான போர் வரலாற்று தகவல்களைக் கொண்ட தமிழர் தரப்பில் இருந்து அத்தகைய வரலாற்று ஆவணங்கள் அரிதாகவே வெளிவந்திருக்கின்றன.

போர் முடிந்து 10 ஆண்டுகளாகப் போகின்ற நிலையிலும் போர் வரலாற்றின் ஒரு பகுதியையாவது நடுநிலையோடும் உண்மையோடும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் தமிழர் தரப்பில் இருந்து எந்தவொரு ஆவணமும் வெளிவராதமை, வரலாற்றை ஆவணப்படுத்துவதில் தமிழர் தரப்பில் உள்ள பெரும் குறைபாடு என்பதா, அக்கறையீனம் என்பதா? என்று தெரியவில்லை.


இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Subathra அவர்களால் வழங்கப்பட்டு 19 Aug 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் யாழ்தீபம் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like