சிங்களவர்களுக்கு புரியவைக்க முடியுமா?

இலங்கை என்கிற நாடு பிளவுபடாமல் பிரியாமல் இருக்க வேண்டுமானால் அதற்கான வாய்ப்பு இதுவே என்று சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறியிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு ஒன்றின் ஊடாக இதனைச் சாதிக்க முடியும் என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய அரசமைப்பு முயற்சிகள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் இரத்தினபுரியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் நீண்ட காலமாகப் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் புதிய அரசமைப்பே ஒரே வழி என்கிற அடிப்படையில், அதற்கு ஆதரவு திரட்டுவதற்கான மிகச் சிறிய முயற்சிகள் ஆங்காங்கே நடந்துவருகின்றன. அப்படிப்பட்ட கூட்டம் ஒன்றிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

சிங்கள மக்கள் அவசியம் தெரிந்துகொள்ளவும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் வேண்டிய கருத்து இது. இலங்கை வாழ் தமிழர்கள் அதிகாரப் பகிர்வு கோரி, கூட்டாட்சி அதிகாரம் கோரி அறவழியில் போராடினார்கள். அந்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போனபோது இளைஞர்கள் ஆயுதங்களுடன் வன்முறை வழிக்குப் போனார்கள்.

30 ஆண்டு காலமாகத் தொடர்ந்த அந்த வன்முறை வழியும் உலக நாடுகளின் உறுதுணையுடன் தோற்கடிக்கப்பட மீண்டும் அறவழியில் இன்னும் சொல்லப்போனால் அனைத்துத் தரப்புகளும் ஒத்தோடவேண்டிய சூழ்நிலையைக் காலம் நிர்ப்பந்தித்தபோது அந்த வழியிலும் தங்கள் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் அதிகாரப் பகிர்வைக் கோரி நிற்கிறார்கள்.

சிங்களத் தலைமைகள் இத்தகைய ஒரு அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் இணங்கி வரமாட்டாது என்கிற அதீத நம்பிக்கையின் காரணமாகவே 1977இலேயே தனித் தமிழீழம்தான் இதற்கான ஒரே தீர்வு என்று தமிழ் மக்கள் மக்களாட்சித் தத்துவத்தின் கீழ் தெளிவான ஒரு முடிவை அறிவித்தார்கள். இருந்தாலும் இன்று வரையில் தொடர்ந்தும் கூட்டாட்சிக்கான அதிகாரப் பகிர்வுக்கான முழு முயற்சிகளையும் எடுத்து வருகின்றார்கள்.

தனித் தமி ழீழம்தான் ஒரே தீர்வு என்று ஆயுதம் எடுத்துப் போராடிவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்கூட பேச்சு என்று வந்தபோது உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக அறிவித்தார்கள். ஆக, எந்தவொரு கட்டத்திலும் அதிகாரப் பகிர்வைத் தமிழர்கள் நிராகரிக்கவில்லை. அது கிடைக்காதபோது தனிநாடு தவிர வேறு வழியில்லை என்கிற முடிவையும் கைவிடவில்லை. இதில் எதைத் தெரிவு செய்வது என்கிற முடிவைச் சிங்கள மக்களே எடுக்கவேண்டும். அதனையே சுமந்திரன் அவர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

எனினும் அவரது இந்தக் கருத்துச் சிங்கள மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்லப்படுமா என்பது கேள்விக்குரி யதுதான். அவரது இந்தக் கருத்துக்கு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனைச் சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்க முடியாது.

பௌத்த, சிங்கள மேலாதிக்கவாதத்தின் ஊடாகவே அரசியலை நகர்த்திப் பழக்கப்பட்டுவிட்ட, அதன் மூலமே வாக்குவேட்டையாட முடியும் என்று நம்புகின்ற தலைமைகள் இருக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது கருத்துக்கள் சிங்கள மக்களின் காதுகளை எட்டுவது மிகமிகக் கடினம். அதையும் தாண்டி சிங்கள மக்களின் மனங்களின் இந்தக் கருத்தை ஆழமாக ஊடுருவ வைக்க முடியும் என்றால் அது மிகப் பெரிய மாற்றத்தையும் தீர்வு விடயத்தில் வெற்றியையும் தரும்.

அதிகாரப் பகிர்வு நாட்டைப் பிரித்துவிடும் என்று நம்பும் சிங்கள மக்கள் மனங்களில் அதிகாரப் பகிர்வு வரவில்லை என்றாலும் நாடு பிரிந்துவிடும் என்கிற செய்தியை விதைப்பது சாதாரணமான விடயமல்ல. அதிலும் ராஜபக்சாக்கள் போன்றவர்கள் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கியாள முடியும் என்கிற நம்பிக்கையைச் சிங்கள மக்களுக்கு ஊட்டும் நிலையில் இந்தப் பணி மேலும் கடினமானது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like