உரிமையாளரை விரியன் பாம்பிடமிருந்து காப்பாற்றிய நாய்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், சங்குவேலி பகுதியில் வயலில் வேலை செய்த விவசாயி ஒருவரை அவரது வளர்ப்பு நாய், புடையன் பாம்பிடமிருந்து காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் குறித்த விவசாயி தனது வயற் காணியில் காலை வேளை நிலத்தைப் பண்படுத்திக்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது விவசாயின் கடைசி மகன் காலை உணவை எடுத்து சென்றுள்ளார். அவரது மகனுடன் அவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்றும் வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த விவசாயி வேலைக் களைப்பில் வயல் வரம்பு ஓரமாக வந்து நின்றுள்ளார். இதன்போது அவர்களது நாய் குறித்த விவசாயியின் காலை நோக்கிக் குரைத்ததுடன் முன்னும் பின்னும் வெருட்சியுடன் ஓடுவதாக சைகை செய்தது.

இதனையடுத்து கீழே தனது காற் பக்கத்தைக் குனிந்து பார்த்த விவசாயிக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது காலுக்கு கீழே நன்கு கொளுத்த கண்ணாடி விரியன் பாம்பு சுருண்ட நிலையில் இருந்துள்ளது. உடனடியாக அவ்விடத்தை விட்டு பதறியடித்து குறித்த விவசாயி ஓடியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த விவிசாயி, “பொதுவாக வயல் பகுதிகளில் காணப்படும் இந்த பாம்பு மிகவும் விசம் நிறைந்தது என்பார்கள். நான் வரம்பு ஓரமாக வேலைக் களைப்பில் நடந்து வந்தபோது அந்தப் பாம்பைக் கண்டேன். ஆனால் அது சுருண்ட நிலையில் இருந்ததால் காய்ந்த மாட்டு எரு என்று நினைத்துவிட்டேன். நல்லவேளை அந்தப் பாம்பிடமிருந்து எங்கள் நாய் என்னைக் காப்பாற்றிவிட்டது.” என் தெரிவித்துள்ளார்.