சிவாஜிலிங்கம் என்னை அடிக்கமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!! – ஐனாதிபதி

மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அதனாலேயே சிவாஜிலிங்கத்துடன் சென்று பேசினேன் என ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். மயிலிட்டி துறைமுகம் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஐனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

அண்மையில் நான் யாழ்ப்பாணம் வந்தபோது சிவாஜிலிங்கம் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தார். நான் உடனேயே எனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்று எதற்காக போராடுகிறீர்கள்? என சிவாஜிலிங்கத்திடம் கேட்டேன்.

இதற்கு பின் எனது நண்பர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவ்வாறு செய்யவேண்டாம் என கூறினார்கள். ஆனால் சிவாஜிலிங்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் தனது மக்களுக்காக போராடுகிறார்.

அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என எனக் கு நம்பிக்கையுள்ளது. இன்றைய நிகழ்வுக்கும் அவர் வந்திருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி என ஐனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

மயிலிட்டியில் சிறிலங்கா அதிபர் – பாடசாலைகளை விடுவிக்க இணக்கம்


யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.


மயிலிட்டிப் பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறிலங்கா அதிபரிடம், சிறிலங்கா படையினரின் வசமுள்ள பொதுமக்களின் ஏனைய காணிகள், பாடசாலைகள், ஆலயங்களையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இதையடுத்து, சிறிலங்கா இராணுவத் தளபதிகளுடன் கலந்துரையாடிய சிறிலங்கா அதிபர், மயிலிட்டிப் பகுதியில் இதுவரை விடுவிக்கப்படாத பாடசாலைகளை இன்னும் இரண்டு வாரங்களில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.