யாழில் 38 பேர் அதிரடியாக கைது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நிகழ்த்திய உரைக்குப் பதிலளித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”வடக்கில் ஆவா குழு மக்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறது. இந்த ஆயுதக் குழு தாக்குதல்களிலும், கொள்ளைகளிலும் ஈடுபடுகிறது.

இந்தக் குற்றவாளிகள் அரசியல் செல்வாக்குடன் செயற்படுகிறார்கள். ஏனென்றால், இவர்கள் கைது செய்யப்பட்டதும் உடனடியாகவே விடுவிக்கப்படுகிறார்கள். ” என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,

“வடக்கில் நிலைமைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில நூறு பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 உந்துருளிகளும், 4 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆவா குழு அரசியல் செல்வாக்குடன் செயற்படுகிறது என்ற எந்த முறைப்பாடும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.