பயிரை மேயும் வேலிகளை தடுக்கப் போகும் சக்தி யார்?

இன்று இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை தேசத்தினை, (ஈழ தேசத்தினை) தமது அற வழி போரினாலும் ஆயுத வழி போரினாலும் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் வடக்கு, கிழக்குத் தாயகத் தமிழர்கள்.

தமிழர் தாயகம் கண்ட உக்கிர வலிகளையும் வடுக்களையும் இவ்வுலகினர் தம்மிரு கண்கொண்டு உற்று நோக்கியிருந்தனர், உலக நாடுகளின் பார்வைகள் கழுகு போல ஈழத்தீவை குறிப்பாக வடக்கினைச் சுற்றி வலம் வந்துகொண்டுதான் இருந்தன.

மீண்டும் அதே சூழல்! உலக பார்வை தற்போது மீண்டும் ஈழத் தேசத்தின் வடக்கு நோக்கி கூர்மைப்படுத்தப்படுகின்றது, ஆனால் அந்த பார்வை வடக்கில் வீரச் சண்டைகளை காணவில்லை, கொத்து கொத்தாய் கொன்று குவிக்கப்படும் அப்பாவி ஈழத் தமிழர்களை காணவில்லை, சிதறிக்கிடக்கும் செல்களையும், சிதறவிட்ட உடல் உறுப்புக்களில் கரைய மறந்து உறைந்து போன இரத்தத்தையும் காணவில்லை.

மாறாக ஒரு தசாப்த யுத்தத்தின் அழிவுகளை ஒன்றாய் தரிசிக்கும் வாய்ப்பை வடக்கில் அரங்கேறும் கொடுமைகளின் வழியே காண்கின்றனர் உலகத்தினர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அப்படி என்னதான் நடக்கின்றது வடக்கில்? அரசியல் யுத்தமா? ஆண்மீக யுத்தமா? இல்லை அழிவை நோக்கிய பயணமா? தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் தற்கொலை முயற்சியைத்தான் வடக்குசார்ந்தோர் தற்போது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர் என பலர் குறைப்பட்டுக்கொள்கின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாய்த்தான் இருக்கின்றது தற்போதைய வடக்கின் நிலமை. என்ன செய்வது தன்னைத் தானே கொன்று புசிக்கும் மனித இனத்தினரல்லவா அங்கும் உள்ளனர், ஆதலால் இடம்பெறும் கொடுமைகளை சகித்து கடந்து செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் நாம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், யாழ். சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். அந்த உக்கிரத்தின் தீவிரம் தற்போது சற்றேத் தணிய ஆரம்பித்துள்ள நிலையில் மீண்டும் ஒரு கொடூரம் வடக்கின் ஸ்த்திரத்தன்மையை நிலைகுலையச் செய்துள்ளது. என்ன செய்வது பரபரப்பான சூழல் ஓயாத ஒரு வாழ்க்கைதான் வடக்கின் தலைவிதி போலும்.

கடந்த இரண்டு நாட்களாக உள்ளூர் ஊடகங்களையும், தாயக மக்களின் மனங்களையும் ஒரு சேர ஆக்கிரமித்துள்ள செய்தி, கிளிநொச்சியில் இடம்பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் நித்தியகலாவின் படுகொலை.

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிலுள்ள, இரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் இருந்து நித்தியகலா சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தானே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம், கொலை செய்யப்பட்ட பெண் கணவரை பிரிந்து வாழும் நிலையில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

“குறித்த பெண்ணுடன் தனக்கு தகாத தொடர்பு இருந்தது. அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான். அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள்.

பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து, அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், குறித்த பெண்ணை கொலை செய்ததாக” சந்தேகநபர் அனைவரையும் திடுக்கிட வைக்கும் வகையில் வாக்குமூலமும் வழங்கியிருந்தார்.

இவை அனைத்தும் நாம் அறிந்தவை, எனினும் இது போன்ற வெளிவராத கொடூரங்கள் எத்தனை என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இது போன்று வடக்கை உலுக்கிய பல சம்பவங்களை கூறலாம், உதாரணமாக வித்தியா, ரெஜினா தற்போது நித்தியகலா.

இந்த சம்பவங்கள் அனைத்தும் நடந்து முடிந்த பின்னர் வடக்கில் ஆங்காங்கே போர்க்கொடி தூக்கப்படுவதும், எதிர்ப்பு பேரணிகள் போராட்டங்கள் நடத்தப்படுவதும் அதையும் சற்று தாண்டி சம்பவம் நடந்த இடம் மீண்டுமொரு யுத்தக்களத்தை நினைவுப் படுத்தும் வகையில் அமைதியற்ற நிலையில் காணப்படுவதும் வாடிக்கையாயிற்று.

வித்தியாவின் கொலையின் பின்னரும் சரி, ரெஜினாவின் கொலையின் பின்னரும் சரி, நித்தியகலாவின் கொலையின் பின்னரும் சரி இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடந்தன, அவற்றுள் அரசியலும் குடிபுகுந்திருந்தன.

நடைமுறையில் எதிராளி ஒருவருக்கெதிராக போர்க்கொடி தூக்கலாம், பேரணி நடத்தலாம், கண்டனம் வெளியிடலாம், ஆனால் குற்றவாளியே நாமாக இருக்கும்போது இவ்வாறான போராட்டங்கள் எங்கணம் சாத்தியப்படும்.

இந்த குற்றங்களின் பின்னணியில் இருப்பவர்களே தாம் வாழும் அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள், நமது தோழர்கள், நமது நண்பர்கள், நமது உறவினர்கள், நமது ஊரார்கள் எனில் அந்த குற்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கும் உண்டல்லவா.

அப்படியெனின் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் எதற்கு? கோசங்கள் எதற்கு, கண்ணீர் எதற்கு? அதையும் மீறி அரசியலும் எதற்கு இந்த போராட்டத்தில்…

உண்மையில் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர், அதாவது தமிழரின் உரிமைகோரிய தமிழீழ யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடும், அதன் அவசியமும் உணரப்பட்டிருந்தது என்றே கூறலாம்.

ஆனால் அதன் பின்னரான நாட்களில் அந்த முறைமை முற்றிலும் மாறிப்போனது, அதனை மாற்றிக்கொண்டார்கள் என்றேகூட கூற முடியும்.

அதனைக் கடந்து வந்து, யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான இந்தக் காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற குற்றச்செயல்களும், மனிதாபிமானமற்ற கொடூர சம்பவங்களும் இது ஈழத்தின் சாம்ராஜ்ஜியம்தானா என்ற கேள்வியை வெளியுலகினருக்குத் தோற்றுவித்துள்ளது.

இத்தனைக்கும் இவை அனைத்தும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த, பொறுப்புக் கூற வேண்டியவர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதுதான் இங்கு ஏற்றுக்கொள்ளவேண்டிய கசப்பான உண்மை.

வித்தியாவின் கொலை, அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது, வேற்று இனத்தாராலோ, வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவராலோ அல்ல.

ரெஜினாவின் படுகொலையும் அவ்வாறே, தற்போது நித்தியகலாவின் படுகொலைச் சம்பவமும் அதே போன்றதுதான் எனும்போது ஏன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்? எதற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்? யாரின் கவனத்தை ஈர்க்க? யாருக்கு விழிப்புணர்வு கொடுக்க?

உண்மையில் சொல்லப்போனால் இன்று எதிர்க்கின்றவன் நாளை மறுதினம் அதே கொடூரத்தை அரங்கேற்றலாம் என்ற சூழல்தான் வடக்கில் நிலவுகின்றது. இதனை தவிர்க்க தான் விழித்தால் அன்றி பிரறால் மற்றவருக்கு விழிப்புணர்வு கொடுக்க முடியாது.

இவ்வாறான சூழலை தடுக்கவும், ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்த சமூகம் சார் மக்கள் பிரதிநிதிகள் என்பதையும் மறுப்பதற்கில்லை, ஆனால் இவற்றையெல்லாம் விடுத்து தனது சொத்து நிலவரம் என்ன? அடுத்த மாகாண சபை உறுப்பினரின் சொத்து விபரம் என்ன? என்பதையே ஐ.நா விவாதம்போல மாகாண சபைகளிலும் பொது மேடைகளிலும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டு செல்வதே எமது தமிழ் தலைமைகளின் தலையாய கடமையாக சமகாலத்தில் மாறிப்போயிற்று.

சக அரசியல்வாதியின் சொத்துக்கள் பற்றியும், அவரது பிள்ளைகள் எங்கே படிக்கின்றனர்? அதற்கு எவ்வளது செலவு ஆகின்றது என்ற கவலையும், அதற்கான புள்ளிவிபரங்களை சேகரிப்பதிலுமே தமிழ் தலைமைகளின் நேரம் செலவாகும் எனில், அதில் மட்டுமே அக்கறை காட்டுவார்கள் எனில் இது போன்ற மனித அவலங்களை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க எங்கிருந்து காலம் வரும் எமது தலைமைகளுக்கு?

நிச்சயம், வடக்கில் இது போன்ற அவலங்கள் இடம்பெறுவதற்கு வடமாகாண சபையையும் மக்கள் பிரதிநிதிகளையும் கூட நாம் குறை கூறலாம். அது உண்மையும் கூட. மக்கள் நலன் பற்றி சிந்திக்க கடமைப்பட்டவர்கள் அவர்களே. பொறுப்புக்கூற வேண்டியவர்களும் அவர்களே..

பார்க்கலாம், இன்னும் எத்தனை வேலிகள் பயிரை மேய்கிறது என்றும், எவ்வளவு பயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது மற்றும் காக்கப்படுகின்றது என்றும், இதில் அரங்கேறும் அரசியல் நாடகங்களையும்..!

பொது எழுத்தாளர் Jeslin

Get real time updates directly on you device, subscribe now.

You might also like