முருகனுக்கு அமைக்கப்பட்ட எம்பக்க தேவாலயம் பற்றிய ஓர் சிறப்பு பார்வை…

தமிழர்களுக்கே சொந்தமான வழிப்பாட்டுத்தலங்கள் பல இன்று
சிங்களவர்களுக்கு சொந்தமாகியுள்ளதுடன் அவர்களின் வழிபாட்டுத் தலமாக மாறிப்போயுள்ளது.இந்த வரிசையில் முருகனுக்காக பல வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டதும்,சுற்றுலா துறையில் வியக்கவைக்கும் கலைப்பண்புகளைக் கொண்டதுமான எம்பக்க தேவாலயம் இன்று சிங்களவர்கள் வழிப்படும் விகாரையாக மாறிப்போயுள்ளது.

கண்டி பிரதான வீதிவழியே பயணிக்கும் போது பிலிமத்தலாவை நகரை அடைந்ததும் எம்பக்க தேவாலயம் என்ற பெயர்ப் பலகையை பார்க்கமுடியும்.

இவ் ஆலயம் உருவான கதை சற்று சுவாரஷ்யமானது. கண்டி வியனமுழ எனும் இடத்தை சேர்ந்த மேள வாத்தியக்காரன் ஒருவன் கடுமையான குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். அவன் தன் நோய் நீங்க வேண்டுமென கதிர்காமக் கந்தனிடம் வைக்க அவனது நோயும் நீங்கியுள்ளது.

அதனால், மகிழ்ச்சியடைந்த அவன், வருடந்தோறும் கதிர்காமத்துக்குச் சென்று கந்தப் பெருமானை வழிபட்டு வந்துள்ளான். ஒருநாள் கனவில் தோன்றிய கதிர்காமக் கந்தன் வந்து எம்பக்க எனும் ஊருக்குப் போகும் படி பணிக்க, அந்த ஊருக்கு வாத்தியக்காரன் சென்றபோது அங்குள்ள தச்சன் ஒருவன் கதிர மரம் ஒன்றை தரிசிப்பதாகவும் அதில் இரத்தம் சீறிப் பாய்வதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

வாத்தியக்காரன் தச்சனை சந்தித்து தான் கனவில் கேட்டதைக் கூற அம்மரத்திற்கு தச்சன் அறுசுவையுடன் உணவு படைத்தும், வாத்தியக்காரர் மேளவாத்தியம் இசைத்தும் வழிபடத் தொடங்கினார்.

இன்றும் கூட இங்கு மூன்று வேளை பூசை வழிபாடுகள், உணவுப்படையல், மேள வாத்திய இசையுடனுமே நடைபெறுகின்றன. கோயிலின் பிரதான மண்டபம் விசாலமாகவும் மேள வாத்தியம் இசைக்கவும் ஆடிப் பாடவும் ஏற்ற விதத்தில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் கம்பளை இராச்சியத்தின் மூன்றாம் விக்கிரபாகு மன்னன் கி.பி. 1370 ஆம் ஆண்டு ஆட்சி செய்த காலத்தில் எம்பக்க என்ற இடத்தில் மக்கள் கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு செய்வதை கண்ணுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடை வழங்கி ஆலயத்தை அமைத்துள்ளார்.

இப்படி அமையப்பெற்ற தேவாலயம் காலப்போக்கில் இந்துக்களின் அடையாளத்தை முழுமையாக இழந்து பௌத்தர்களின் புனித தலமாக மாற்றம்பெற்றது. இத் தலத்திற்கென ஒரு தனி சிறப்பு உள்ளது. இலங்கையிலேயே அதி உன்னதமான மரவேலைப்பாடுகள் கொண்டது எம்பக்க தேவாலயத்தில் தான்.

இலங்கையில் வேறு எங்கும் பார்க்க முடியாத தனிச்சிறப்பு எம்பக்க தேவாலய கூரைகளுக்கு உள்ளது. வாத்தியக்கார மண்டபம் என்றழைக்கப்படும். முன் மண்டபம் அதன் நீளமான பக்கத்தில் ஆறு தூண்களும், அகலமான பக்கத்தில் நான்கு தூண்களும் கூரையைத் தாங்கி நிற்கின்றன.

அதனைத் தவிர உட்புறம் நான்கு பக்கத்திலும் வரிசையாக மொத்தம் 32 தூண்கள் மேலும், கூரையைத் தாங்கி நிற்கின்றன. கூரையைத் தாங்கும் தூண்களுக்கும் கூரைக்கும் இடையில் இணைப்புப்பாலங்களாக சமாந்தரங்களாக இடது புறமாகவும் வலது புறமாகவும் 7 ஜோடித் தூண்கள் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ளன.

கூரையில் அகலவாக்கில் 12 பலகைகளும், நீளவாக்கில் 66 பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர கூரையின் இறங்கு பிரதேசத்தைப் பிரித்து அவற்றில் இரு புறமும் நீளவாக்கில் 41 பலகைகளும், அகலவாக்கில் 12 பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பலகைகள் அனைத்தும் கூரையின் உச்சியில் குருப்பாவை என்றழைக்கப்படும் உத்தரத்தில் பிணைக்கப்பட்டிருக்கின்றமை பார்ப்பவர்களை வியக்கச்செய்கிறது

நம்நாட்டிற்கே உரித்தான கலை அம்சம் கொண்டு செதுக்கப்பட்டுள்ள இத்தகைய குருப்பாவையுடன் கூடிய உத்தரத் தூண்கள் இலங்கையில் வேறு எங்குமே கிடையாது என்று சொல்லப்படுகின்றது.

எந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரத்தாலான வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையும் அமைக்கப்பட்டுள்ளமை, ஏறக்குறைய இங்குள்ள தூண்களில் 600க்கும் மேற்பட்ட மரவேலைப்பாட்டு அலங்கார ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளமை இதன் விஷேட அம்சமாகும்.

பொதுவாக நேரத்தை களிப்பதற்காக சுற்றுலா செல்பவர்கள் இவ்வாறு தமிழர் தம் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் இடங்களுக்கு செல்வதன் மூலம் அழிந்துவருகின்ற எமக்கேயான உடைமைகளை பாதுகாக்க முடியும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like