யாழில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கோபுரம்

திராவிடர் கட்டிடக் கலைப் பண்பாட்டைப் பின்பற்றி யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அதி உயர வரவேற்புக் கோபுரம் ஒன்று கடந்த திங்கட்கிழமை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு கண்ணகைபுரத்தில், கண்ணகையம்மன் என்றழைக்கப்படுகின்ற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயத்திற்குச் செல்கின்ற பக்தர்கள், யாத்திரிகர்களை உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கும் நோக்கத்தில் 47 அடி உயரம் கொண்டதாக இந்த வரவேற்புக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

வீதியின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோபுரம் 95 அடி நீளத்தையும் 27 அடி அகலத்தையும் கொண்டதாகப் பண்டைய அரசர் காலத்து கட்டிடங்களை நினைவுபடுத்தும் வகையில் காணப்படுவது இதன் விசேட அம்சங்களில் ஒன்றாகும்.

புங்குடுதீவு கண்ணகைபுரம் கண்ணகை அம்மன் என்றழைக்கப்படுகின்ற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலய பிரதம குருக்கள் பிரதிஸ்டாரட்ன மதுசூதன குருக்களின் தலைமையில் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் செல்லையா யுகேந்திரன், மங்கள வாத்தியங்கள் முழங்க இந்த கோபுரத்தை நாடாவெட்டி திறந்து வைத்தார்.இந்தக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய முத்துக்குமாரு கிருபானந்தன் குடும்பத்தினர் நினைவுப் படிகக்கல்லைத் திரைநீக்கம் செய்து வைத்தனர்

இந்தக் கட்டிடத்திற்கான வடிவமைப்பை தெருமூடி மடம் என்ற தமிழரின் புராதன வரவேற்புக் கோபுர அமைப்பை ஆதாரமாகக் கொண்டு நவீன தேவைகளை உள்ளடக்கி இந்த வரவேற்புக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது என இந்த கட்டிடத்தை வடிவமைத்த கட்டிட கலை நிபுணர் கரிகரன் தாமோதரம்பிள்ளை குறிப்பிட்டார்.ந்தக் கட்டிடத்தின் இரு பக்கங்களிலும் 50 பேரளவில் 100 பேர் இருந்து களைப்பாறிச் செல்லத் தக்க அமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

தங்கக் கலசங்களைக் கொண்ட முடிகள் அடங்கிய மேற்பகுதியில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வி அம்மன், கண்ணகை அம்மன், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆகிய தெய்வச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

எமது கட்டிடக்கலை கலாசாரத்தையும் ஆன்மீகம் சார்ந்த கலை கலாசார நுணுக்கங்களின் முக்கியத்துவம், அவற்றின் பெறுமதிகளை இளந்தலைமுறையினருக்கு எடுத்தியம்புவதும் இந்த வரவேற்புக் கோபுரத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்த கட்டிடக் கலைஞர் ஹரிஹரன் இலங்கையிலேயே இதுவே இத்தகைய வடிவத்திலான ஒரேயொரு பிரமாண்டமான கட்டிட அமைப்பாகும் என்றும் கூறினார்.

கண்ணகை அம்மன் என்றழைக்கப்படுகின்ற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர அம்மன் ஆலயத்திற்கு வருகை தருகின்ற யாத்திரிகர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலரையும் வவேற்று, அவர்கள் இளைப்பாறிச் செல்லத்தக்க வகையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

கண்ணகைபுரத்திற்குள் பிரவேசிப்பவர்களை வரவேற்கின்ற இந்த கோபுரம் தெய்வீகத் தன்மை உடையதாக அமைந்திருக்க வேண்டும் என்பதில் அதன் கட்டிடக் கலைஞரும் அதற்கு நிதியுதவி வழங்கியோரும் தீவிர கவனம் செலுத்திச் செயற்பட்டுள்ளனர். அதற்கமைவாகவே பண்டைய அரசர் காலத்து கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்ற நிறப்பூச்சும் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்து ஆலயங்களை நிர்மாணிப்பதில் 40 வருடங்களாக முழு நேரப் பணியாகக்கொண்டு செயற்பட்டு வருகின்ற வவுனியா சமளங்குளத்தைச் சேர்ந்த ஸ்தபதி கனகலிங்கம் வினோசிறி தனது கட்டிட நிர்மாண குழுவினருடன் இணைந்து நிர்மாணித்துள்ளார்.பல்வேறு கட்டிடக் கலை நுணுக்கங்களையும் தமிழரின் பாரம்பரிய கலாசார அம்சங்களையும் கொண்டதாக இந்த கோபுரத்தை கட்டி முடிப்பதற்கு இரண்டு வருடங்கள் சென்றதாக கனகலிங்கம் வினோசிறி கூறினார்.

நூற்றுக்கணக்கான ஆலயங்களையும், ஆலயங்களின் உயரமான கோபுரங்களையும் அமைத்த அனுபவம் பெற்றிருக்கின்ற போதிலும், இந்த வரவேற்பு கோபுரத்தைக் கட்டியதன் ஊடாகக் கட்டிடக் கலையின் முக்கிய அம்சங்கள் பலவற்றைப் புதிதாகத் தெரிந்து கொள்ளவும், தனது அனுபவத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்டுள்ள கட்டிட நுணுக்கங்களைப் பயன்படுத்தி மன நிறைவடையவும் முடிந்திருக்கின்றது என்றும் வினோசிறி தெரிவித்தார்.

இத்தகைய கட்டிடத்தை இனிமேல் எவரும் கட்டுவார்களா என்பது தெரியவில்லை. ஏனெனில் இவ்வாறான கோபுரத்தைக் கட்டுவதற்கு அவசியமான பெரும் தொகையிலான முதலீட்டைப் பெறுவது கடினம். அத்;துடன் அந்தக் கட்டிடத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய நுணுக்கங்கள் எல்லோருக்கும் சாதாரணமாகக் கைவரப் பெற்றிருக்கமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

நயினாதீவுக்குச் செல்லும் வழியில் முக்கிய சந்தியில் அமைந்துள்ள இந்த வரவேற்புக் கோபுரமானது அங்கு செல்கின்ற இந்து மற்றும் பௌத்த மத யாத்திரிகர்கள், பக்தர்கள், அடியார்கள் மட்டுமல்லாமல் உல்லாசப் பயணிகளையும் கவர்ந்து இழுக்கத்தக்க ஓர் ஆன்மீக கலை கலாசார பெறுமானம் கொண்ட உல்லாசப் பயண ஸ்தலமாக நாளடைவில் பிரசித்தி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like