திருகோணமலையில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்..

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு சுமார் 12.35 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மூதூரில் ஆரம்பத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் பின்னர் தோப்பூர், குச்சவௌி, தம்பலகாமம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பிரதேசங்களில் சிறிது நேர இடைவௌியில் உணரப்பட்டுள்ளது.

நிலாவெளி, உவர்மலை, மனையாவெளி, வீரநகர், பிரதான வீதி, தம்பலகாமம், ஈச்சலம்பற்று, மூதூர், கட்டைப்பறிச்சான், திருக்கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் சில இடங்களில் அச்சத்துடன் தங்கள் வீடுகளை விட்டும் வௌியில் ஓடிவந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 2 – 3 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாகவும், சுனாமிக்கான அச்சம் ஏதும் இல்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்களுக்கோ, சொத்துக்களுக்கோ எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.