தியாகி திலீபனின் நினைவேந்தல் இன்று 10.48க்கு நல்லூரில் ஆரம்பம்

தியாகதீபம் தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (26) காலை 10.48 மணிக்கு ஆரம்பமாகும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். அதில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

தியாகி திலீபனின் நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று திட்டமிட்டவாறு யாழ்ப்பாணம் மாநகர சபையால் நடத்தப்படும். இன்றைய நிகழ்வுகள் பின்வரும் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

இன்று புதன்கிழமை காலை 10:48 மணியளவில் தியாக தீபம் தியாகி திலீபன் அவர்கள் எமது மக்களுக்காகத் தனது இன்னுயிரை ஆகுதியாக்கிய இடத்தில் அகவணக்க நிகழ்வுகள் இடம்பெறும். அங்கிருந்து தியாக தீபத்தின் நினவுத் தூபி உள்ள இடத்துக்கு அஞ்சலி செலுத்துவோர் வந்து சேர்வர்.

அங்கு பொதுச் சுடரை எமது மக்களுக்காக தாம் ஈன்றெடுத்த இரண்டு உயிர்களை மாவீரர்களாக்கிய சின்னவன் மற்றும் சரசு ஆகியோர் ஏற்றுவார்கள். ஈகைச் சுடரை தாம் ஈன்றெடுத்த இரண்டு உயிர்களை மாவீரர்களாக்கிய பெற்றோர் விநாயகமூர்த்தி மற்றும் செல்வமணி ஆகியோர் ஏற்றுவார்கள்.

தியாக தீபம் தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கான மலர் மாலையை மாவீரர் இனியவனின் புதல்வியார் மோதழில் அணிவிப்பார். இவற்றின் பின்னர் அஞ்சலி செலுத்துவோர் மலரஞ்சலிகளைச் செலுத்துவார்கள். – என்றுள்ளது.