அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்த தமிழ் மாணவனின் சாதனை!!

2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியதை அவர்களின் பெறுபேறுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

தமக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மாணவர்கள் பெறுமை தேடித்தந்துள்ளதுடன், அவர்களுக்கு அனைத்து மட்டங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மலையகத்தில் இருக்கும் ஒரு தமிழ் மாணவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

லிந்துலை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வகுமார் நிரஞ்சன் என்ற விசேட தேவைக்குரிய சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று அங்குள்ள அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்.

22 மாணவர்கள் குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய போதும், அதில் இம்மாணவர் மட்டுமே சித்தி பெற்றுள்ளார். அத்துடன் 18 மாணவர்கள் 70க்கும் மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இதில் செல்வகுமார் நிரஞ்சன் என்ற சிறுவன் பிறப்பிலிருந்தே முதுகு எலும்பு பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் பெற்றோரின் உதவியுடனேயே பாடசாலைக்கு வருகின்றார்.

இவருடைய பெற்றோர் தோட்டத்தொழில் செய்து தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இவர் 166 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ள விடயம் அனைவர் மத்தியிலும் பெரிதும் பேசப்படுகின்றதுடன், குறித்த மாணவனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.