பிரபாகரனே நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார்! 10 வருடங்களின் பின் வெளிவரும் உண்மைகள்

சீமான் பிரபாகரனை சந்தித்தது, ஆயுதப்பயிற்சி எடுத்தது அனைத்தும் உண்மையான விடயம் என விடுதலைப் புலிகள் தயாரித்த எள்ளாளன் திரைப்படத்தை இயக்கிய GT நந்து தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“2008ஆம் ஆண்டு எள்ளாளன் திரைப்படம் எடுப்பதற்கு இலங்கைக்கு சென்றிருந்த போது ஒருவாரம் கழித்து சீமான் அங்கு வருகைத் தந்திருந்தார்.

15 நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். சீமான் ஒரு கிழமை எங்களுடன் இருந்தார். போர் நடந்து கொண்டிருக்கும் அந்த சந்தர்ப்பத்திலேயே சீமான் வந்தார்.

அக்காலக் கட்டத்தில் சீமான் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டமை உண்மையே. அப்போது விடுதலைப் புலிகளின் ஆடைகளை அணிய விருப்பம் என சீமான் தெரிவித்திருந்தார்.

அதற்கு ஒரு விதிமுறைகள் இருக்கின்றன, புலிகள் அமைப்பில் சேர வேண்டும், ஆயுதப்பயிற்சி பெற வேண்டும் என கூறப்பட்டது. அதற்கு சீமானும் சம்மதம் தெரிவித்திருந்தார்.

அப்போது ஏகே 74 துப்பாக்கி மற்றும் 50 கெலிபர் எனும் விமானத்தையே தகர்த்தும் துப்பாக்கியையும் சுடுவதற்கு சீமான் பயிற்சி பெற்றார்.

இதையடுத்து 3 நாட்கள் அண்ணன் பிரபாகரனின் காவலில் சீமான் இருந்தார். அவரே வண்டியில் வந்து சீமானை கூட்டிச் சென்றிருந்தார். அந்த நிமிடம் தான் நான் பிரபாகரனை நேரில் கண்டேன்.

பிரபாகரனே சீமானை அழைத்துச் சென்றார். இதை நானே நேரில் பார்த்தேன். இதற்கு நானும், என்னுடன் வந்திருந்தவர்களும் சாட்சி.

நாம் பிரபாகரனுடன் புகைப்படம் எடுக்கவில்லை. புகைப்படம் எடுப்பதற்கு அனைவரும் நின்றபோது பாதுகாப்பை கவனத்திற் கொண்டு “எடுக்க வேண்டாம்” என நடேசன் தடுத்து நிறுத்தினார். எமக்கு கவலையாக இருந்தது.

ஆனால் சீமான் புகைப்படம் எடுத்தார். அதை என்னிடம் காட்டினார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் என்று உருவானதோ அன்றிலிருந்து அங்கு ஜாதி வேறுபாடு இல்லை. தமிழ், தமிழன் என்ற ஜாதி மட்டுமே இருந்தது. அதைப்போல் இங்கும் இருந்தால் நன்றாக இருக்கும்.” என திரைப்பட இயக்குநர் GT நந்து தெரிவித்துள்ளார்.