3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்!

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் அண்மையில் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள தாயொருவர் முயற்சித்துள்ளார்.

வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.என்.தென்னக்கோன் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் தாயும், பிள்ளைகளும் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் தற்கொலைகளை தடுப்பது தொடர்பாக இன்று இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு உற்பட்ட பிரிவுகளில் 13 பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த பொலிஸ் நிலையங்களுக்கு கீழுள்ள பகுதிகளில் கடந்த பத்து மாதங்களுக்குள் இடம்பெற்ற தற்கொலைகள் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மொத்தமாக 22 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் அதிகமானவர்கள் இளவயதினர். தற்கொலைக்கு விஷமருந்துகளையும் சிலர் பயன்படுத்தியுள்ளனர்.

இதில்செட்டிகுளம் பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

எனினும் அதிஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். இதேவேளை எங்களுக்கு ஆச்சரியமான விடயமாக 14,15,16 வயது சிறுவர்களின் தற்கொலைகள் அமைகின்றன.

வவுனியாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர், பெண்கள் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

உங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று உங்களது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளவும் என குறிப்பிட்டுள்ளார்.