வவுனியாவில் நகரசபையின் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் சர்கார் திரைப்பட டிக்கட்டுகள்!!

வவுனியா நகரசபையின் அனுமதியின்றி வவுனியாவில் பல்வேறு இடங்களில் சர்கார் திரைப்படத்திற்கான முற்பதிவு டிக்கட்டுக்கள் விற்பனைகள் இடம்பெற்று வருகின்றன. டிக்கட்டுகளின் பின்புறத்தில் இளையதளபதி விஜய் நற்பணி மன்றம் வவுனியா எனவும் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வவுனியா விஜய் நற்பணி மன்றத்தின் தலைவரை தொடர்பு கொண்டு வினவியபோது,

எமது சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே நாங்கள் முற்பதிவு டிக்கட் விற்பனை செய்ய முடிவேடுத்துள்ளோம் .

முற்பதிவு டிக்கட்க்கு நகரசபைக்கு வரி செலுத்த தேவையில்லை. நாங்கள் விற்பனை செய்யும் டிக்கட்டுகளை வசந்தி திரையரங்குச் செல்லும்போது வழங்கினால் அங்கு வவுனியா நகரசபைக்கு வரி செலுத்தப்பட்ட (டிக்கட்டின் பின்பகுதியில் நகரசபையின் சின்னம் பொறிக்கப்பட்ட) டிக்கட் வழங்கப்படுமென தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தலைவர் இராசலிங்கம் கௌதமனை தொடர்புகொண்டு கேட்டபோது,

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் எந்தவொரு டிக்கட் விற்பனை செய்வதாகவிருந்தாலும் வவுனியா நகரசபைக்கு வரி செலுத்தப்பட்டு நகரசபையின் சின்னம் டிக்கட்டின் பின்பகுதியில் பொறிக்கப்பட வேண்டும் (முற்பதிவு டிக்கட் என்றாலும் வரி செலுத்துதல் வேண்டும்)

மற்றும் வவுனியா வசந்தி திரையரங்கிற்கு முன்பாக அமைந்துள்ள சர்கார் திரைப்படத்திற்கான பதாதைகளுக்கும் எவ்வித கட்டணங்களும் நகரசபைக்கு செலுத்தப்படவில்லை.

இவ் விடயம் தொடர்பாக எனக்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. முறைப்பாடுகள் தொடர்பாக விரைவாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.