ஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்? எப்படியான கூட்டணிகள் அமையும்? யாரெல்லாம் கூட்டு சேர்வார்கள்?- இவைதான்இன்று பலருக்கு தலைவெடிக்கும் கேள்விகளாக உள்ளன. தினமும் எல்லா பத்திரிகைகளும் இதைப் பற்றியே பக்கம்பக்கமாக கட்டுரைகளை எழுதித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் இந்த கேள்வி சலிக்காமல், புதிய புதிய விடைகளை கண்டடையத் தக்கதாக மக்களிற்கும், ஊடகங்களிற்கும் இருந்து கொண்டிருக்கின்றன.

வடமாகாணசபை தேர்தல் களம் நிச்சயம் பெரும் திருவிழாவாகவே இருக்கப் போகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்தோ, அல்லது மாவை, விக்கியென இரண்டாக உடைந்தோ போட்டியிடும். ஈ.பி.டி.பி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சுதந்திரக்கட்சி, ஐ.தேக, சுயேட்சைகள் என ஒரு கோயில் திருவிழாவில் கூடும் கூட்டமளவு வேட்பாளர்கள் நிச்சயம் களமிறங்குவார்கள்.

இந்த தேர்தல் திருவிழாவின் முடிவு எப்படியிருக்கும்? தேர்தலிற்கு முன்னர்… கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்? கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? விக்னேஸ்வரன் தனிவழி போவாரா? டக்ளஸ் தேவானந்தா தேர்தலில் போட்டியிடுவாரா? இப்படி ஓராயிரம் கேள்விகள் மக்களிடம்.

ஆதரவாளர்களும் இந்த கேள்விகளிற்கு விடையின்றி அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கேள்விகளிற்கு அவர்களிற்கு உடனடியாக விடை தெரிய வேண்டும். ஆனால், எல்லா முகாம்களிலும் இந்த விடயத்தில் அதிகபட்ச பூடகத்தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது.

வாசகர்களின் குழப்பங்கள் எல்லாவற்றிற்கும் நாம் இந்த தொடரில் தீர்க்கவுள்ளோம். யார் யார் வேட்பாளர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது… கட்சிகளின் வெற்றி வாய்ப்பு… தேர்தல் களம் எப்படியிருக்கும்… என பல விடயங்களையும் தொடராக தரவிருக்கிறோம்.

இந்த வாரம், ஈ.பி.டி.பியில் இருந்து தொடங்கலாம்.

கடந்த மாகாணசபை தேர்தலிலும், தான் களமிறங்க போவதாக டக்ளஸ் தேவானந்தா கட்சி முக்கியஸ்தர்களிடம் கூறிக்கொண்டிருந்தார். களமிறங்கப் போகிறேன் என்பதை போன்ற தோற்றத்தை ஊடகங்களிடமும் காண்பித்துக் கொண்டிருந்தார். இப்போதிருந்தளவிற்கு அல்லாவிட்டாலும், அதற்கு கிட்டவான ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தார். ஆனால் இறுதிநேரத்தில் அந்த முடிவை தவிர்த்து விட்டார். டக்ளஸ் தேவானந்தா அப்பொழுது போட்டியில் பங்குபெற்றாததன் ஒரே காரணம்- வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை இல்லாததே.

கடந்த முறையை போன்றே, இம்முறையும் தேர்தலில் களமிறங்க போவதாக ஒரு அபிப்பிராயத்தை டக்ளஸ் தேவானந்தா ஏற்படுத்தி வருகிறார். கடந்த முறையை விட, இம்முறை ஈ.பி.டி.பிக்கு வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதால், அப்பிராயத்தை உருவாக்குவதிலும் டக்ளஸ் தேவானந்தா உற்சாகமாக இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட, ஈ.பி.டி.பியின் வாக்குகள் யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட தொன்னூறாயிரமளவில் அதிகரித்துள்ளது. மாகாணசபை தேர்தலில் இன்னும் அதை வளர்த்தெடுக்கலாமென ஈ.பி.டி.பி முகாமில் நம்பிக்கையிருப்பதாக தெரிகிறது.

இதைவிட, இந்திய தரப்பிலிருந்தும் பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அதை ஈ.பி.டி.பி பகிரங்கமாகவே குறிப்பிட்டுமிருக்கிறது. மொத்தத்தில் அடுத்த மாகாணசபை தேர்தலில் புது தெம்புடன் ஈ.பி.டி.பி களமிறங்கும்.

என்றாலும், டக்ளஸ் தோனந்தாவிற்கு சில பிரச்சனைகள் உள்ளன. முதலாவது, மாகாணசபையை கைப்பற்றுமளவிற்கு ஈ.பி.டி.பி பிரமாண்டமான வெற்றியடையுமா என்ற சந்தேகம். குடாநாடு முழுவதும் பரவலாக வாக்கு வங்கி அதிகரித்துள்ளது சரிதான். ஆனால் அந்த பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றியடைவார்களா என்பதில் உத்தரவாதங்கள் இல்லை. உள்ளூராட்சி தேர்தலில் விகிதாசாரமுறையை சிறிய கட்சிகளிற்கு கைகொடுக்க, அவர்கள் கணிசமான பிரதிநிதித்துவத்தை பெற்றன. இதனால் கையை சுட்டுக்கொண்ட பெரிய கட்சிகள் இனிமேல் இந்த முறைமையில் எவ்வளவு ஈடுபாடு காட்டுவார்கள் என்பது சந்தேகமே. பழையமுறையில் தேர்தல் நடந்தால், ஈ.பி.டி.பியின் வெற்றி வாய்ப்பு குறைவடையும். கட்சியின் வாக்குவங்கியில் உயர்வுள்ளதே தவிர,அந்த தொகுதிகளில் எதிரணி வேட்பாளர்களை வீழ்த்துமளவிற்கான மாற்றமெதுவும் நிகழவில்லை.

இப்போதைய நிலவரப்படி, கடந்த முறையை விட சில ஆசனங்கள் அதிகமாக பெறலாமென்பதற்கு அப்பால் ஈ.பி.டி.பியால் அதிசயங்கள் நிகழ்த்த வாய்ப்பில்லை.

நிச்சயம் முதலமைச்சராகலாமென்று தெரிந்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு மாகாணசபை தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், இப்போதைக்கு அப்படியான வாய்ப்புக்கள் சந்தேகமானது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு, எதிர்க்கட்சி தலைவராகவோ அல்லது மாகாணசபை உறுப்பினராகவோ செயற்படுவதை யாருமே விரும்பப் போவதில்லை. தனது அரசியல் வாழ்வின் இறுதிக்காலத்தில் இருப்பதாக சூசகமாக குறிப்பிட்டு வருகிறார் டக்ளஸ் தேவானந்தா. ஒருவேளை, கடைசிக்கட்டத்தில் இரண்டிலொன்று பார்க்கலாமென்ற அதிரடி முடிவுகள் எடுக்கிறாரோ தெரியவில்லை. ஒன்றில் முதலமைச்சர் அல்லது ஓய்வு என்ற இரண்டிலொரு முடிவு களத்திற்குள் இறங்க முடிவுசெய்தால், டக்ளஸ் மாகாணசபை தேர்தலில் போட்டியிடலாம்.

மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதில் டக்ளஸிற்கு உள்ள அடுத்த பெரிய பிரச்சனை- நாடாளுமன்ற உறுப்புரிமையை துறப்பது. டக்ளஸ் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்தால், அது மு.சந்திரகுமார் வசமாகும். நாடாளுமன்ற தேர்தலில் டக்ளஸிற்கு அடுத்ததாக அதிக வாக்கு எடுத்தவர் சந்திரகுமார். இப்போது ஈ.பி.டி.பியிலிருந்து விலகி செயற்படுகிறார். நாடாளுமன்ற உறுப்புரிமையை கொடுத்து, அவரை பலப்படுத்த டக்ளஸ் தேவானந்தா விரும்பப் போவதில்லை.

மொத்தத்தில், தனது அரசியல் வாழ்வை துறக்கும் முடிவொன்றை எட்டும்வரை டக்ளஸ் தேவானந்தா மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு குறைவு.

டக்ளஸ் தேவானந்தா களமிறங்காவிட்டால், ஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?

ஈ.பி.டி.பியின் பிரதான சிக்கலே இதுதான். போராட்ட வழிமுறையில் வந்த அமைப்பென்றாலும் இரண்டாம் மட்ட ஆளுமைகள் யாரையும் ஈ.பி.டி.பி உருவாக்கவில்லை. ஈ.பி.டி.பி மட்டுமல்ல, புலிகளில் தொடங்கி- எல்லா ஆயுத இயக்கங்களின் இயல்பும் அதுதான். ஈ.பி.டி.பியின் ஆயுத செயற்பாட்டு மரபில் இல்லாமல், பின்னாளில் கட்சியுடன் இணைந்து செயற்பட்டவர்களிலும் அப்படியான ஆளுமைகள் கிடையாது. கட்சியால் நலனடைபவர்களே தவிர, அவர்களால் கட்சி நலனடையவில்லை.

ஈ.பி.டி.பி உருவாக்கிய இரண்டாம் மட்ட ஆளுமை- வெகுஜன அங்கீகாரம் பெற்றவரென மு.சந்திரகுமாரை மட்டும்தான் குறிப்பிடலாம். தேர்தலில் போட்டியிட்ட மற்றையவர்கள் அப்படி நிரூபிக்கவில்லை. சந்திரகுமார் இப்பொழுது கட்சியுடன் இல்லை. முன்னாள் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன், தற்போதை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் கட்சியை விட்டு சென்றதும் அடையாளமில்லாமல் போய்விட்டார்கள். ஏதாவதொரு கட்சியின் அரவணைப்பிற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். தனி ஆளுமையாக அவர்கள் தம்மை நிரூபிக்க முடியவில்லை. கட்சியை விட்டு வெளியில் வந்து, தனித்த அடையாளமாக முடிந்தது சந்திரகுமாரால் மட்டுமே.

இந்தநிலையில், ஈ.பி.டி.பி முதலமைச்சர் வேட்பாளரை முன்வைத்து போட்டியிடுவதென்பது மிகமிக சாத்தியக் குறைவானது. இப்போதைய ஈ.பி.டி.பி முகாமிற்குள்ளிருந்து- டக்ளஸ் தேவானந்தாவை தவிர்த்து- அப்படியான ஒருவரை கண்டுபிடிக்கவே முடியாது.

அதற்கு உதாரணம்- யாழ் மாநகரசபை தேர்தல். தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியெல்லாம் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தியபோது, ஈ.பி.டி.பி முகாமிற்குள் பெரிய குழப்பமிருந்தது. அவர்களிடம் கவர்ச்சிகரமான ஒரு முதல்வர் வேட்பாளர் இருக்கவில்லை. ஒருவேளை, கவர்ச்சிகரமான முதல்வர் வேட்பாளர் இருந்திருந்தால், இப்போது பெற்ற பெறுபேற்றையும் விட, சாதகமான பெறுபேற்றையும் பெற்றிருக்கலாம்.

மாநகரசபையிலேயே கவர்ச்சிகரமான முதல்வர் வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், மாகாணசபையில் அது சாத்தியமென கருத முடியாது. அதேநேரம் வெளியிலிருந்து வேட்பாளர்களை கொண்டுவர கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் அனுமதிக்கப் போவதில்லை. கட்சியிலிருந்து ஒதுங்கி வெளிநாட்டில் இருந்த சந்திரகுமார், தவராசா உள்ளிட்ட சிலரை 2009 இன் பின்னர் கட்சியின் முக்கிய பொறுப்புக்களிற்கு கொண்டு வந்தார் டக்ளஸ் தேவானந்தா. அது கட்சிக்குள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது. அப்போது கட்சிக்குள் நடந்த கூட்டமொன்றில், இரண்டாம் நிலை தலைவர்கள் எல்லோரும் அவரது முடிவிற்கு எதிராக பேசியபோது, கண்களிலிருந்து நீர் வடிய, மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தார் டக்ளஸ் தேவானந்தா. அவருக்கு அன்று நெஞ்சுவலியும் வந்திருந்தது.

ஈ.பி.டி.பிக்குள் இரண்டாம் நிலை தலைவர்களின் பிடி சற்று அதிகம். ஈ.பி.டி.பிக்குள் இருந்து சந்திரகுமார், தவராசா போன்றவர்கள் வெளியேறியதில் இரண்டாம் நிலை தலைவர்களின் பங்கும் அதிகம். பொதுவாகவே எல்லா இயக்கங்களிலுமுள்ள இயல்பது. அமைப்பின் நீண்டகால உறுப்பினர்களை தவிர்த்து, புதிய முகங்களிற்கு முன்னுரிமையளித்தால், கட்சிக்குள் குழப்பம் வரும். அதேநேரம், அமைப்பின் நீண்டகால உறுப்பினர்கள் ஆயுத செயற்பாட்டாளர்களாகத்தான் இருப்பார்கள். அரசியல்ரீதியான ஆளுமையும், மக்கள் செல்வாக்கும் குறைந்தவர்களாக இருப்பார்கள். ஆயுதப் போராட்ட வடிவத்திலிருந்து தேர்தல் அரசியலிற்கு வரும் இயக்கங்கள் இந்த இரண்டு தரப்பிற்குமிடையில் வெற்றிகரமான சமன்பாட்டை கண்டடைய வேண்டும். அப்படியென்றால்தான் அந்த கட்சி நீண்டகாலத்திற்கு நிலைக்கும்.

இதுவரை ஈ.பி.டி.பி அப்படியான சமன்பாடெதையும் கண்டுபிடித்ததாக தெரியவில்லை. டக்ளஸ் தேவானந்தா என்ற தனிநபரை நம்பியதாகவே கட்சியுள்ளது. இது ஈ.பி.டி.பியை கயிற்றில் நடக்கும் நிலைமையிலேயே வைத்திருக்கும். மாகாண முதலமைச்சரும் இல்லை, நாடாளுமன்ற உறுப்புரிமையும் இல்லையென்றால்… அப்படியொரு நிலைமையை ஈ.பி.டி.பி எதிர்கொள்வது சிரமம்.

மொத்தத்தில் ஈ.பி.டி.பிக்கு இது சிக்கலான காலகட்டம். டக்ளஸ் தேவானந்தாவை தவிர்த்த கவர்ச்சிகரமான முதலமைச்சர் வேட்பாளர் அந்த முகாமிற்குள் இல்லை. கல்விப்புலத்தை சேர்ந்த சிலர் வெளியிருந்து கட்சியை ஆதரிக்கிறார்கள். அவர்களும் கவர்ச்சிகரமான வேட்பாளர்கள் அல்ல. டக்ளஸ் தேவானந்தா களமிறங்குவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. வெளியிலிருந்து வேட்பாளரை கொண்டு வருவதை கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் விரும்ப போவதில்லை.

இந்த நிலைமையில் டக்ளஸ் தேவானந்தாவிடம் இரண்டு தெரிவுகளே உள்ளன.

1.நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து போட்டியிடுவது. இதிலுள்ள பாதகமாக அம்சங்களை குறிப்பிட்டுள்ளோம்.

2.தேர்தலின் பின்னர் தேசியப்பட்டில் மூலமோ, இன்னொரு உறுப்பினரை பதவி விலகச் சொல்லி அந்த இடத்திற்கோ வரலாம். அது தேர்தல் முடிந்ததன் பின்னரே சாத்தியம்.

இப்போதைய நிலைமையில் இரண்டாவது தெரிவிற்குத்தான் வாய்ப்புக்கள் அதிகம். மாகாணசபையை ஈ.பி.டி.பி கைப்பற்றினால், அதன்பின்னர் டக்ளஸ் தேவானந்தா நுழையவே வாய்ப்புள்ளது.

யாழ் மாநகரசபையில் களமிறக்கியதை போல, “வழக்கமான“ அணியொன்றே களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.