அழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் புதியதொரு கட்சி தொடங்குகிறார் என்ற தகவலை தமிழ்பக்கம் முதன்முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ் அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது.

அனந்தி கட்சி ஆரம்பிக்கிறார் என்றதும் எங்கெல்லாம் ஷொக் அடித்ததோ இல்லையோ, தமிழரசுக்கட்சி முகாமிற்குள் பெரிய ஷொக்கே அடித்திருக்கிறது. அதன் விளைவுதான், யாழ் பொதுநூலக மண்டபத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஆரம்ப நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையென்கிறார்கள் விடயமறிந்த வட்டாரங்கள்.

சரி, இப்பொழுது விசயம் என்னவென்றால், நாளை மீண்டும் அனந்தியின் கட்சியான- ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின்ஆரம்ப நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. அரச, மாநகர நிர்வாகங்களிற்கு கீழ் உள்ள இடங்களில் நிகழ்வை நடத்தினால்தானே முட்டுக்கட்டைகள் போடலாம், தனியாருக்கு சொந்தமான இடங்களில் நிகழ்வை நடத்தினால் யாரும் முட்டுக்கட்டை போட முடியாதென்பதால் இம்முறை தனியார் ஹொட்டல் ஒன்றில் ஆரம்ப நிகழ்வை நடத்துகிறார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள யு.எஸ். ஹொட்டலில் நடக்கவுள்ளது. கொள்ளை பிரகடன உரை, கொடி அறிமுகம், ஆதரவாளர் சந்திப்பு என்பன நடக்குமாம். காலை 9 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கிறது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தமிழரசுக்கட்சி முகாமிற்குள் இதற்கு எப்படி ரியாக்ஷன் என்பதை தெரிய வேண்டுமே. முக்கிய “தலைக்கே“ தொலைபேசி அழைப்பேற்படுத்தினோம்.

கட்சி ஆரம்பிக்கட்டும், இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாதுதானே என்ற சாரப்பட எச்சரிக்கையாக பேசினார்.

இந்த இடத்தில் ஒரு ப்ளாஷ்பேக் சம்பவத்தையும் சொல்கிறோம்.

கடந்த வடமாகாணசபை தேர்தல் சமயத்தில் அனந்தி, தமிழரசுக்கட்சி பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தார். ஆரம்ப கட்ட பட்டியலில் பலரது பெயர் இருக்கும். மார்ட்டின் வீதி கட்சி அலுவலகத்தில் வைத்தே இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அப்போது, அனந்தியின் விபரத்தை கவனித்த எம்.ஏ.சுமந்திரன், அவருக்கு ஆசனம் கொடுப்பதில் சிக்கலிருப்பதாக சொன்னார். அனந்தி அப்போது அரசசேவையில் இருந்தார். அதிலிருந்து முறைப்படி விடுமுறை பெறவில்லையென குறிப்பிட்டு, அவருக்கு வேட்புமனு வழங்க முடியாதென கூறிவிட்டார். அனந்தியும் எவ்வளவோ கேட்டுப்பார்த்தார். சுமந்திரன் மறுத்துவிட்டார்.

கிட்டத்தட்ட கண்கலங்கிய நிலைமையில் வெளியில் வந்தார். வெளியில் சிவாஜிலிங்கம் மற்றும் சிலர் நின்றார்கள். சிவாஜியிடம் வந்து விசயத்தை சொல்லியுள்ளார். விசயம் ஒரு சுற்றுசுற்றி வந்து, இன்னொரு தலைவர் தேர்தல் ஆணையாளருக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி, இந்த நிர்வாக சிக்கலை எப்படி தீர்ப்பதென கேட்டார்.

அது ஒரு சனிக்கிழமை.

இன்று வேட்புமனு தாக்கல் செய்தாலும், முறைப்படி விடுகைபெற்ற ஆவணங்களை திங்கட்கிழமை சமர்ப்பியுங்கள் என ஆணையாளர் குறிப்பிட்டார். இதை பின்னர், தமிழரசுக்கட்சி தலைவர்களிடம் சொல்லி, அனந்திக்கு ஆசனம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அனந்தி அன்று அழுதார், சிக்கல்பட்டுத்தான் வேட்புமனு பெற்றார் என்பதெல்லாம் இதில் விசயமல்ல. அரசியலில் நுழையும்போதே, நிறைய சவால்களை சந்தித்தார். இப்போது இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். புதிய கட்சி தொடங்கும்போது, சவால்கள் வருகிறது. இதையும் கடந்த செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆனால் ஒன்று- அன்று அனந்திக்கு உதவி செய்த சிவாஜிலிங்கம் இன்று அதிகமாக, வெளிப்படையாக எதையும் செய்ய முடியாது. அதிகமேன், நாளைய கூட்டத்திற்கு கூட போக முடியாது. அனந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் போவதில்லையென்ற முடிவில்தான் சிவாஜி இருப்பதாக தெரிகிறது. காரணம், கூட்டமைப்பின் தலைமையின் கோபத்தை சம்பாதிக்க விரும்பவில்லை.

இப்போதைக்கு அனந்திக்கு அவரால் செய்ய முடிந்த ஒரேயொரு உதவி- ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் என் பெயரை தேர்வுசெய்து கொடுத்தது மட்டுமே!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like