ஒளிபரப்புகள் நிறுத்தம்…. மகிந்தவின் வசமானது சிறிலங்கா அரச ஊடகங்கள்!

சிறிலங்காவில் நேற்று கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அரச ஊடகங்களின் பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன், நள்ளிரவில் அரச தொலைக்காட்சிகளான ரூபவாஹினி மற்றும் ஐரிஎன் என்பனவற்றை மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அரச ஒளிபரப்புகள் செயலிழந்தன.

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்றதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள், அரச ஊடகங்களுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

முதலில் ஐரிஎன் தொலைக்காட்சி செய்தி அறைக்குள் நுழைந்த குழுவினர், அங்கிருந்த பணியாளர்களை தாக்கி வெளியே இழுத்துத் தள்ளினர்.

அதேவேளை, ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்திலும் குழப்ப நிலை ஏற்பட்டது. இந்தக் குழப்பங்களினால் ரூபவாஹினி தொலைக்காட்சி நள்ளிரவுக்கு முன்னர் செயலிழந்தது.

ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்கு மகிந்தவின் நெருங்கிய சகாவும், முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவும் சென்றிருந்தார்.

அனைத்து அரச ஊடகங்களையும் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

அரச தொலைக்காட்சிகளான ஐரிஎன், மற்றும் ரூபவாஹினி என்பனவற்றை குண்டர்கள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை அடுத்து, ஒளிபரப்புகள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரச ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் பணியாளர்களும், துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அதனையும் மகிந்த ஆதரவாளர்கள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

லேக் ஹவுஸ் நாளிதழ்களான டெய்லி நியூஸ், தினமின, சிலுமின ஆசிரிய பீடங்களை, மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்கங்கள் நேற்றிரவு கைப்பற்றியுள்ளன.

இதையடுத்து, டெய்லி நியூஸ் நாளிதழின் முன்பக்கம், மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களால் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அதிகாரபூர்வமற்ற முறையில் நடந்த இந்த அதிகார கைமாற்றலின் போது, வன்முறைகள் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஐரிஎன், ரூபவாஹினியில் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, அங்கு சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச ஐரிஎன் செய்திப்பிரிவின் பிரதி பொது முகாமையாளர், சுபாஸ் வீரதுங்க ஜெயவர்த்தன, மகிந்தவின் பதவியேற்புக்குப் பின்னர், திட்டமிட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

தம்மை உடனடியாக பணியகத்தில் இருந்து வெளியேறுமாறும், ஆலோசனை கூறப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

“நான் எனது வாகனத்தில் ஏனைய இரண்டு பணியாளர்களுடன் வெளியேற முனைந்த போது, சிறிலங்கா பொதுஜன முன்னணி தொழிற்சங்க ஆதரவாளர்களால் வாயிலில் முற்றுகையிடப்பட்டோம்.

மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள், உங்களின் நேரம் முடிந்து விட்டது, கீழே இறங்குங்கள் என்று அச்சுறுத்தினர்.

அதையடுத்து ஐரிஎன் தொலைக்காட்சியின் நீண்ட காலப் பணியாளர்கள் வந்து எம்மை, பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அவர்கள் பாதுகாப்பு வழங்கியதால் தான் வெளியேற முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.