மகிந்தவின் ஆட்சியில் முன்னரைவிட கடுமையாக உழைப்பேன்! உறுதிமொழி எடுத்தார் டக்ளஸ்

நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது, மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து யுத்தமில்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம் என்ற நம்பிக்கையுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ஈ.பி.டி.பின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்படுவதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிபீடமேற்றியதாக கூறிய கடந்த ஆட்சியில் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி வாக்குகளை அபகரித்தவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளான அரசியல் தீர்வு மற்றும் காணாமல் போனோர் விவகாரம், காணிகள் மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை, எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு உரியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டத் தவறியிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளிவிட்டு தமது சுயலாப அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்ததால், தமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்காக வீதியில் இறங்கிப்போராடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

பல தசாப்தங்களுக்கு மேலாக யுத்த அழிவுகளுக்கு முகம்கொடுத்து வந்துள்ள எமது மக்களுக்கு,வாழ்க்கைச் சுமையும், விலைவாசி உயர்வும் மேலும் துயரத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி,பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் என்றும்,எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப அதற்கான முயற்சிகளையும், வழிகாட்டல்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வழங்கும் என்றும் தெரிவித்ததுடன்,

இதேவேளை பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள மாகாணசபைகளுக்கு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் மாகாணசபையை பொறுப்பேற்று நடத்தும் சூழலை உருவாக்கவும், பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் நம்புகின்றோம்.

முன்னர் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது, மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து யுத்தமில்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like