சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்! ஐ.தே.கவுக்குள் கடும் மோதல்! அடுத்த தலைவர் சஜித்?

கொழும்பு அரசியலில் தளத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் புதிய திட்டங்களை வகுத்துள்ளனர்.

கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையை அடுத்து கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவை கட்சியின் தலைவராக நியமிக்க உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் சஜித்தை பிரதமராக்க வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த யோசனையினால் ரணில் குழு மற்றும் சஜித் குழுவுக்கு இடையில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதாக கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமகாலத்தில் ஜனாதிபதிக்கும் ரணிலுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் பிரதமராக மீண்டும் ரணில் வரும் பட்சத்தில் சுமுகமாக செயற்படுவதில் சிக்கல் உள்ளன.

இவ்வாறான நிலையில் சஜித் பிரேமதாஸ தலைமையில் பெருமைபான்மை நிரூபித்து, மீண்டும் அரசாங்கத்தை அமைக்க முடியும். இதற்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் சிறிய கட்சிகள் இதுவரை சஜித்திற்கு ஆதரவு வழங்கவில்லை. கட்சியின் தலைவராக ரணில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.