புதிய பிரதமர் நியமனம்!- வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் மைத்திரி விளக்கம்

கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட பிரச்சினைகளே புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதற்கான காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வெள்ளிக்கிழமை பிரதமராக நியமித்தார்.

இந்நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட இவ்விடயம் பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.