நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, சட்டவிரோதமாக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள சிறிசேன – ராஜபக்ச தமது எதிரணியினரை அரச நிறுவனங்களில் இருந்து நீக்கி வருவதுடன் சாதாரண அரச ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீரவின் தலைமை அதிகாரியும் தேசிய லொத்தர் சபையின் செயல் பணிப்பாளருமான துசித ஹல்லோலுவகேவின் சாரதியாக பணியாற்றி வந்த ஹிமேஷ் நிஸங்சல டி சில்வா மீது தாக்குதல் நடத்தி, அவரை நிறுவனத்தில் இருந்து விரட்டியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் பணிக்கு வந்தால் கொலை செய்ய போவதாக எச்சரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூழ்ச்சி மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ள மகிந்த தரப்பு சீன நிறுவனங்களிடம் இருந்து கிடைத்த பணத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அரச ஊழியர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருவதுடன் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிசேன – ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த அருவருக்கத்தக்க தாக்குதல் மற்றும் பழிவாங்கல்கள் என்பன அவர்களின் எதிர்கால பயணம் தொடர்பான தெளிவான தோற்றத்தை எடுத்துக் காட்டியுள்ளதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.






