மைத்திரியும் மகிந்தவும் கொள்ளையடித்துள்ளனர்! ரஞ்சன் ராமநாயக்க

ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணைந்து பிக்பொக்கட் அடித்து விட்டதாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நான் இந்த பேரணிக்கு வருவதற்கு முன்னர் பிரதமர் யார் என்று கூகுளில் தேடிப்பார்த்தேன் இன்னும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்றே வருகிறது.

மைத்திரியும் மகிந்தவும் எமது பிரதமர் பதவியை பிக்பொக்கட் அடித்து விட்டனர். வெட்கமில்லையா?.

ராஜபக்சவினர் தாம் அடித்த கொள்ளையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர். இவற்றை கூறி, கும்பிட்டு விழுந்து பிரதமர் பதவியை பெற்றுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச வீதியில் போராடும் போராளி என்று நாங்கள் நினைத்தோம். எனினும் இவ்வாறு பிச்சை கேட்டு பிரதமர் பதவியை பெற்ற ஒரே நபர் மகிந்த ராஜபக்ச.

நாங்கள் சீனாவுக்கு நாட்டை சொந்தமாக எழுதிக்கொடுக்க உடன்படிக்கைகளை செய்யவில்லை என சீன தூதரகத்திற்கு கேட்படி கூறுகிறோம்.

மீண்டும் எமது அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நான் வசந்த சேனாநாயக்கவின் மரபணுவை பரிசோதிப்பேன்.

அவர் உண்மையில் சேனாநாயக்க பரம்பரையை சேர்ந்தவரா என்பதை அறிய மரபணு பரிசோதனை நடத்த வேண்டும். ரணிலுடன் கோபம் கொண்டவர்கள் இங்கு இருக்கின்றனர்.

சஜித், நவீன், அகில ஆகியோர் இருக்கின்றனர். அன்று ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக் கூட்டத்திற்கு வர முடியாமல் இருந்த மைத்திரிபால சிறிசேனவை, எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தனது வாகனத்தில் அழைத்து வந்தார்.

யாரால் நீங்கள் ஜனாதிபதி பதவிக்கு வந்தீர்கள்?. ரஞ்சனுக்கு எதிராக 21 வழக்குகள் இருக்கின்றன. வழக்குகள் இருக்கின்றன என்பதற்காக நான் கட்சி மாற மாட்டேன் என்றும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.