சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 4 மாடுகளும் ஒருதொகை மரக்குற்றிகளையும் இன்று அதிகாலை தாம் கைப்பற்றியதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வவுணதீவில் இடம்பெற்ற விசேட சோதனை நடவடிக்கையின்போது, இந்த கைப்பற்றல் இடம்பெற்றதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. நிஸாந்த அப்புஹாமி குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஆரியசேன, பொலிஸ் உத்தியோகத்தர்களான பி.புனிதகுமார், வை.வி. கஷீர், ஆர்.நந்தராஜபக்ஸ, எஸ்.மனோகரன், எம்.சாஜஹான் ஆகியோரிணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
படுவான்கரை பிரதேசத்திலிருந்து காத்தான்குடி, மட்டக்களப்பு போன்ற நகரப் பகுதிகளுக்கு அதிகமாக மாடுகள் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறியுள்ளார்.






