100-க்கு 98 மதிப்பெண் பெற்ற 96 வயது பாட்டி: குவியும் பாராட்டு

ஆலப்புழாவைச் சேர்ந்த 96 வயது கார்த்தியாயினி எனும் பாட்டி அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவுத் தேர்வில் 98% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் இந்தத் தேர்வை நடத்தியுள்ளது.

வாசிக்கும் திறனை சோதித்துப் பார்ப்பது, எழுதுவது மற்றும் கணக்குப் பாடம் இந்தத் தேர்வில் இருக்கும். எழுதும் திறனில் 40-க்கு 38 மதிப்பெண்களும், வாசிக்கும் திறனிலும் கணிதவியலில் முழு மதிப்பெண்களும் பெற்றுள்ளார். தேர்வு முடிவுகள் புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டன.

இதுகுறித்து பேசிய கார்த்தியாயினி, ”நல்ல மதிப்பெண்கள் பெற்றது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் மேலே படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” என்றார்.

தன்னுடைய இளமைக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத கார்த்தியாயினி பாட்டி, வீட்டு வேலை செய்து தன் பிழைப்பை நடத்தியவர். தனது 51 வயது மகள் அம்மணியம்மாவிடம் இருந்து படிக்கும் ஆசை முளைத்தது என்கிறார் அவர். பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவரான அம்மணியம்மா, கல்வி வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்றதன் மூலம் 10-ம் வகுப்புக்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

முதல்வர் கையால் சான்றிதழ்

இதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கார்த்தியாயினிக்குப் தகுதிச் சான்றிதழ் வழங்க உள்ளார்.

முன்னதாக மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் ஆகியோர் கார்த்தியாயினி பாட்டி தேர்வெழுதும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து பாட்டிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like