தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் பலர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எனினும் தான் யாருக்கும் ஆதரவு வழங்காமல் இருந்த போதிலும், மக்களுக்கு நன்மை செய்ய கிடைத்த சந்தர்ப்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று அல்லது நாளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் இவ்வாறு ஆதரவு வழங்குவதனால் தனக்கு அமைச்சு பதவி ஒன்று கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், தனது உறுப்பினர் பதவியில் வன்னி மக்களுக்கு சேவை செய்த சேவையைவிடவும் பாரியதொரு சேவையை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும், பாராளுமன்றத்தில் உயர் பதவி வகிக்கும் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை மஹிந்த தரப்புடன் இணைந்து பிரதியமைச்சர் பதவியை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






