முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சொல்லித்தான் நான் அரசாங்கத்தில் இணைந்துகொண்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், ஊடக தர்மத்திற்கு மாறாக சில ஊடகங்கள் இவ்வாறு செய்திகளை எழுதுவதாக அண்மையில் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இனிவரும் காலங்களில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்து செயற்படுவீர்களா என இதன் போது அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், “விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணாவின்) உதவியுடன் தான் அரசாங்கத்தில் இணைந்துகொண்டதாக சிலர் தெரிவிக்கின்றனர். எனினும், அவருக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
அவருடைய தொலைபேசி இலக்கம் கூட என்னிடம் கிடையாது. சிலர் ஆதாரமற்ற வகையில் போலியான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவருடன் இணைந்து செயற்பட போவதில்லை” என பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மேலும் கூறியுள்ளார்.






