தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தர கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையிலே ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதுவே மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு செய்யும் பரிகாரமாக அமையும்.
மகிந்த ராஜபக்சவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளார். இது அறத்தின் பால் வழங்கப்பட்டிருக்கின்ற ஒரு தீர்ப்பாகும்.
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நசுக்கியது மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று கொத்துக்கொத்தாக கொன்று குவித்து விட்டு இன்று அதே தமிழ் மக்களிடம் வந்து தான் ஆட்சியில் இருப்பதற்காக மண்டியிடுகின்றார்.
இன்று இலங்கையில் யார் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கின்ற சக்தியை தமிழ் மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கின்றார்கள்.
மகிந்த, எந்த காலத்திலும் தமிழ் மக்களிடம் மண்டியிடுவேன் என்று நினைத்திருக்க மாட்டார். ஆனால் இன்று அவர் தமிழ் மக்களிடம் மண்டியிடுகின்ற ஒரு நிலை எழுந்திருக்கின்றது.
இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகிந்த அமைச்சுப்பதவி வழங்குவதாகவும் கோடிக்கணக்கில் பணம் வழங்குவதாகவும் பேரம்பேசி வருகின்றார்.
இந்த மண்ணின் விடுதலைக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களினதும் மக்களினதும் உயிர்களுக்கு யாரும் விலை பேசமுடியாது.
இதற்கு பரிகாரமாக தமிழ் மக்களுடைய அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய ஒரு தீர்வு திட்டத்தை வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு தமிழ் மக்களுக்கு ஒருதீர்வை வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ச தயாராகவில்லை.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசுகின்றார். தமிழ் மக்களுடைய இழப்புக்களை ஈடு செய்வதற்கு எவராலும் எந்தவிலையும் பேசமுடியாது.
மாறாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரக்கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
இதுவே அவர் தமிழ் மக்களுக்கு செய்யும் பரிகாரமாக அமையும். அதைவிடுத்து தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற வகையிலேயே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






