ஜனாதிபதியின் திடீர் முடிவிற்கான காரணம் என்ன? அம்பலமானது இரகசியம்

புலனாய்வுத் தகவல்கள் சிலவற்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தார் என்று அரசாங்க உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும், மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது வாக்களிக்காமல் நடுநிலை வகிக்க சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முடிவு செய்திருப்பதாகவும், சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் இன்று பதவி விலக திட்டமிட்டுள்ளனர் என்றும் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன.

அத்துடன், மஹிந்த ராஜபக்சவுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த அமரவீர – துமிந்த திசநாயக்க அணி இணைந்து செயற்படுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டன.

நேற்றுமுன்தினம் துமிந்த திசநாயக்கவின் இல்லத்தில், மஹிந்த, பசில் மற்றும் 20 அமைச்சர்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களை ஒரு அறிக்கையாக வெளியிடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீரவுக்கு- மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால் அவர், ஜனாதிபதியின் கோரிக்கையை உதறி விட்டு கண்டிக்குச் சென்று விட்டார்.

இதன் பின்னர் நேற்று பிற்பகல் மஹிந்த ராஜபக்சவையும், பசில் ராஜபக்சவையும் அழைத்த ஜனாதிகதி, அவர்களுக்கு 68 உறுப்பினர்களின் ஆதரவு மாத்திரமே உள்ளது என்று புலனாய்வு அறிக்கையை கொடுத்துள்ளார்.

அதன் பின்னரே மூவரும், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்கு வந்தனர் என்றும் கூறப்படுகிறது.