‘விடுதலைப்புலிகள் என்னுடன் இரண்டு முறை உடன்பாடு செய்ய முயன்றனர்’: முதன்முறையாக வாய் திறக்கிறார் ரணில்!

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப் புலிகள் இரண்டு தடவை முயன்றனர். எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன்’ என்று முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை 14ஆம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தையும் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இன்று விடுத்துள்ள சிறப்பு அறிக்கையில் இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘இரத்தக்களறியேற்படும் ஆபத்துள்ளது என அவர்கள் கருதியிருந்தால் சபாநாயகரை சந்தித்தவேளை கட்சிதலைவர்கள் சுட்டிக்காட்டியிருப்பார். எனினும் அதுதொடர்பில் எவரும் இதுதொடர்பில் தெரியப்படுத்தவில்லை.

நாடாளுமன்றத்தில் வன்முறைகள் நிகழும் சூழ்நிலை காணப்பட்டிருந்தால் அது தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டியது சபாநாயகர்தான். எனினும் ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட்டு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் நாடாளுமன்றத்தை கலைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் அவர்களிற்கான விலைகள் குறித்து சிறிசேனவிற்கே தெரிந்திருந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியே ஐக்கியதேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களிற்கு அமைச்சு பதவிகளை வழங்கியது.

இதன் காரணமாக மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மீதும் நாடாளுமன்றத்தின் மீதும் நம்பிக்கை இழந்தார்கள். மக்களிடமிருந்து பெற்ற ஆணையை மதிப்பதற்காக நான் கடந்த மூன்றரை வருடங்கள் மிகவும் பொறுமையாகயிருந்தேன். நான் அவமானங்களையும் ஏளனங்களையும் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டேன்.

எனினும் நான் பொறுமையாகயிருந்தன் காரணமாகவே மூன்றரை வருடங்கள் இந்த அரசைத் தொடர முடிந்தது.

நான் எனது தனிப்பட்ட நலன்களை அரசியல் நலன்களில் இருந்து பிரித்துப்பார்த்தே வந்துள்ளேன்’ என்றுள்ளது.