யாழில் வீதியில் பயணித்தவருக்கு பொலிஸார் செய்த கொடூரம்!

வீதியால் பயணித்தவரைக் கைது செய்த சுன்னாகம் பொலிஸார், தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு சித்திரவதை செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லவில்லை என்பதற்காக இவ்வாறு குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றிப் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஏழாலையைச் சேர்ந்த பாலசிங்கம் – பிரகாஸ் என்பவரே முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாடு தொடர்பில் மேற்படி இளைஞரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

ஏழாலையில் கடந்த 19ஆம் திகதி இரவு 10.45 அளவில் வீடுநோக்கி கால்நடையாகச் சென்று கொண்டிருந்தேன். அங்கு வந்த மைத்துனரின் முச்சக்கர வண்டியில் ஏறிப் பயணித்தேன். எனது வீட்டுக்கு மிக அண்மையாகப் பொலிஸார் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மைத்துனர் சகல ஆவணங்களையும் காண்பித்தார்.. இறுதியில் என்னிடம் அடையாள அட்டையைக் கோரினர்.

நான் அடையாள அட்டையை எடுத்துச் சென்றிருக்கவில்லை. அவ்வாறெனின் பொலிஸ் நிலையம் வருமாறு என்னை அழைத்தனர். எனது மைத்துனரும் கூடவே வந்தார். பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிச் சென்று என்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்கினர். எனது மைத்துனரான பாலசிங்கம் – நிரஞ்சனை (வயது 29) என்பவரை அவர்களது சமையல் கூடத்துக்குள் கொண்டு சென்று அடைத்தனர்.

எங்கள் இருவரையும் பொலிஸார் காரணம் எதுவுமே கூறாது பலமாகத் தாக்கிச் சித்திரவதை செய்தனர். எங்களைத் திருடர்களா என்றும் எல்.ரீ.ரீ.ஈ இல் இருந்தனியா என்றும் கேட்டனர். 20ஆம் திகதி மாலையில் எந்தச் சட்ட நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டோம். ஆனால் பொலிஸாரின் சித்திரவதை வேதனைகளைத் தாங்க முடியவில்லை. தெல்லிப்பழை மருத்துவமனையில் 20ஆம் திகதி சிகிச்சைக்குச் சென்றோம். மருத்துவ விடுதியில் தங்க வைக்கப்பட்டுச் சிகிச்சை வழங்கினர்.

நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டோம். மனித உரிமை ஆணைக்குழுவில் இது தொடர்பில் முறையிட்டுள்ளோம். தற்போது பொலிஸார் எங்களுடன் தொடர்பு கொண்டு சமரசம் பேசுகின்றனர் – எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரிடம் கேட்டபோது, “அவர்கள் வீதியில் மதுபோதையில் சென்று கொண்டிருந்தனர். தமக்கு என்ன நடந்தது என்று தமக்குத் தெரியாது என்றே அவர்கள் கூறினர்” என்று தெரிவித்தனர்.

மருத்துவமனைத் தரப்பிடம் தொடர்பு கொண்ட போது, இருவருக்கும் காயங்கள் காணப்படுகின்றன. சிகிச்சை வழங்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.