சுவிஸ் நகரசபை தேர்தலில் ஈழத்து தமிழ்ப் பெண் வரலாற்று சாதனை!!

சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிட்டு நேரடியாக வெற்றிவாகை சூட்டியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 2003 வாக்குகளை பெற்றார். நேற்று நடந்த தேர்தலில், 2916 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.

தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு சுவிஸில் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும், புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார்.

தற்போது சுவிஸின் எஸ்.பி எனும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியில் தூண் மாநில நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இதேவேளை, இவர் தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார்.

சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்றையும் தர்சிகா அண்மையில் மேற்கொண்டிருந்தார்.

இவரது வெற்றி, சுவிஸில் அரசியலில் பிரகாசித்து வரும் தமிழ் இளையோருக்கு, மற்றுமோர் எடுத்துக் காட்டாக அமைந்து உள்ளது.

இவரது வெற்றி குறித்து பிரபல இணையம் ஒன்று நேரடியாக தொடர்பு கொண்டு கேட்ட போது, எனது வெற்றிக்காக அயராது பாடுபட்ட, வாக்களித்த அனைவருக்கும் நன்றின் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எப்போதும் நான் வீணாக்க மாட்டேன் என்பதுடன், எப்போதும் போன்று சோஷலிசமான சிந்தனைகளுடன், நடுத்தர குடும்பங்களின் தேவைகளுக்கும், பாடசாலை மாணவர்களின் கல்வி சம்பந்தமான விடயங்களுக்கும், மற்றும் பெண்களுடைய முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபடுவேன் என உறுதி தருவதுடன், இந்த தூண் நகரத்தை மென்மேலும் இடதுசாரி சிந்தனைகளுடன் முன்னேற்றுவேன் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, சுவிஸ் தூண் நகரசபையில் முதன்முதலாக வெற்றியீட்டிய முதல் தமிழ்ப் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like