உச்சகட்ட பரபரப்பில் சிறிலங்கா! இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அல்லது நாளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மனுக்களை தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 நீதியரசர்களைக் கொண்ட குழு விசாரணைக்கு எடுத்திருந்தது.

நான்கு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர், தீர்ப்பு அறிவிக்கப்படும் திகதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த ஒருவார காலப்பகுதியில் தீர்ப்பு தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் தீர்மானங்களில் ஏழு நீதியரசர்களும் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 14ம் திகதி முதல் அடுத்த மாதம் 7ம் திகதி வரையில் நீதிபதிகளுக்கான பருவகால விடுமுறை வழங்கப்படவுள்ளமையினால் அதற்கு முன்னர் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

தீர்ப்பினை தொகுக்கின்ற பணிகள் நேற்று மதியம் வரை இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும் உச்சநீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீர்ப்பு அதிகளவு பக்கங்களைக் கொண்டதாக இருப்பதால், நாளைக்குள் அது முழுமையாக வெளியிடப்படுவதற்கு சாத்தியங்கள் குறைவு என்றும் கூறப்படுகிறது.

எனவே, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் சுருக்கத்தை இன்றைய தினத்திற்குள் அறிவிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால், நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.