வெளியானது வரலாற்று தீர்ப்பு! நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானதென உச்ச நீதிமன்றம் சற்று முன்ன்ர் அறிவித்துள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான 7 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதியரசர்கள் குழாமில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் மூர்து பெர்னாண்டோ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியல் அமைப்புக்கு முரணானது என வலியுறுத்தி இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் 13 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு நாள் குறிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட ஐவர் முழுமையான நீதியரசர்கள் குழாமை பெயரிடுமாறு நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்ததுடன், இதன் பிரகாரம் பிரதம நீதியரசர் நலின் பெரேரா குறித்த மனுக்கள் மீதான விசாரணைக்கு தாம் உள்ளடங்கலாக 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமை நியமித்தார்.

பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைநிறுத்தி கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

எனினும், கடந்த 7 ஆம் திகதி கூடிய உயர் நீதிமன்றம் இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்காலத் தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்படவுள்ளது.