இன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல!

இன்று ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்கும் புதிய அரசில் சுதந்திரக்கட்சியின் எட்டு எம்.பிக்கள் அமைச்சு பதவிகளை ஏற்றாலும், அது தேசிய அரசல்ல, அவர்கள் தனிப்பட்டரீதியிலேயே அமைச்சு பதவியை பெறுகிறார்கள் என்ற விளக்கத்தை சு.க தரப்பு கூற ஆரம்பித்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காகவே, இந்த நகர்வை சு.க தரப்பு மேற்கொள்வதாக தெரிகிறது.

ரணிலை பிரதமராக்குவதென ஜனாதிபதி முடிவெடுத்த பின்னர், சு.க வினருடன் நடத்திய கலந்துரையாடலில், கட்சிக்காரர்கள் யாராவது தனிப்பட்டரீதியில் அரசுடன் இணைந்து அமைச்சு பதவியை பெற்றால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்சவிற்கு பெற்றுக்கொடுப்பதற்காகவே, ஆரம்பத்திலேயே இப்படியொரு ஏற்பாட்டை ஜனாதிபதி மேற்கொண்டதாக தெரிகிறது.

சு.க அமைச்சர்கள் சிலர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள் என்ற செய்தி, நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களிற்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து சிலர் ஜனாதிபதியை நேரடியாகவே தொடர்பு கொண்டு வினவியதாகவும், அமையவுள்ளது தேசிய அரசல்ல என அவர்களிற்கு ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் தெரிகிறது.

இதேவேளை, இன்று காலை 10.30 மணியளவில்- சுபநேரத்தில்- பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கிறார். இன்று சில அமைச்சர்களும் பதவியேற்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரி அடுத்து வரும் நாட்களில் ஐ.ம.சு.கூட்டமைப்பு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பவுள்ளது.

எவ்வாறெனினும், அடுத்து வரும் நாட்களில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சர்ச்சை தோன்றுமென்றுதான் தெரிகிறது.