மஹிந்தவிடம் இருந்து சம்பந்தனின் பதவியை காப்பாற்ற போராடும் கூட்டமைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க வேண்டாம் என வலியுறுத்தி இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராகவும், மஹிந்த அமரவீரவை பிரதான எதிர்க்கட்சியின் பிரதம கொஹடாவாகவும் அங்கீகரிப்பதாக சபாநாயகர் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார்.

இந்நிலையில் இதனை எதிர்க்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் இன்று இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அரச தலைவராகவும், அமைச்சரவையின் தலைவராகவும் விளங்குகின்ற நிலையில், ஐ.ம.சு.கூ. எதிர்க்கட்சியாகவும் கருத முடியாது என குறித்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைவர் அரச தலைவராக மாத்திரமின்றி அமைச்சரவை அமைச்சராகவும், அவருக்கு கீழ் ஐந்து அமைச்சுப் பதவிகளும் காணப்படுகின்ற நிலையில், ஐ.ம.சு.கூ. எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.