அதிகார பேராசையால் மகிந்த அனைத்தையும் இழந்து வருகிறார் – ரவூப் ஹக்கீம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் ஜனரஞ்சகமான தலைவர் என்ற போதிலும் அதிகாரத்தின் மீது இருக்கும் பேராசை காரணமாக அவர் அனைத்தையும் இழந்து வருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் பலவேறு சூழ்ச்சிகள் மற்றும் அதிகார புரட்சிகள் ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் தனது அமைச்சில் நேற்று கடமைகளை பொறுப்பேற்று கொண்ட பின்னர் கருத்து வெளியிடும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மாதங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதில் ஜனநாயகத்திற்காக அணி திரண்ட அனைவருக்கும் நாம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த அமைச்சர் பதவி தற்காலிகமானது. இது பொதுத் தேர்தலுக்கு பின்னர் வழங்கப்பட்ட அமைச்சு பதவியல்ல.

அடுத்த வருடம் சில தேசிய தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. முதலில் எந்த தேர்தல் நடத்தப்படும் என்பது தெரியாது. தனிப்பட்ட நன்மைகள் பற்றி சிந்திக்காது நாட்டை பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும்.

எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதிக்கு பின் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த தேர்தலில் போட்டியிட நேரிடும். நாடு தழுவிய ரீதியிலான தேர்தலில் புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்படும்.

பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் இன்றி அதனை தீர்மானிக்க முடியாது. இந்த தேர்தல்களில் பல்வேறு சூழ்ச்சிகள் இடம்பெறலாம்.

அதிகார புரட்சி ஏற்படலாம். அப்போது எதிரிகள் நண்பர்களாக மாறலாம், நண்பர்கள் எதிரிகளாக மாறலாம் எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.