பிள்ளைகள் உள்ள அப்பாக்களுக்குத்தான் தெரியும் மக்களின் பிரச்சினைகள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மித்தெனிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பேசிய மகிந்த ராஜபக்ச, நாம் சிறிய பௌத்த பிக்குகளுக்கு பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர், அது தமிழாக இருக்கலாம், ஆங்கிலமாக இருக்கலாம் அல்லது பிரெஞ்சு மொழியாகக் கூட இருக்கலாம். மொழிக் கல்வியை கட்டாய பாடமாக அறிவித்து சிறிய பௌத்த பிக்குகளுக்கு அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.
மொழிகளை கற்றுக் கொடுப்பதன் மூலம் பௌத்த மதத்தை விஸ்தரிக்க முடியும் என்பதுடன், மரித்துப் போகும் மொழிகளில் ஒன்றாகவே சிங்கள மொழி காணப்படுகின்றது.
பௌத்த மதத்தின் ஊடாகவே சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் பேசினார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய மகிந்த,
பிள்ளைகள் உள்ள தந்தையரினால் தான் நாட்டு மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும், அதனையும் நான் நினைவுபடுத்துகின்றேன் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் மகிந்த ராஜபக்சவை பிரதமராக மைத்திரிபால சிறிசேன நியமித்தாலும், அரசியலமைப்பின் காரணமாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பினாலும் மகிந்த ராஜபக்ச தன்னுடைய பதவியை துறந்தார்.
இதனையடுத்து மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று நாட்டில் அமைச்சரவையும் உருவாக்கப்பட்டு, அரசியல் குழப்பங்கள் ஓரளவுக்குத் தணிந்துவருகின்றன.
இந்நிலையில், எதிர் கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச தற்போது செயற்பட்டுவரும் சூழ்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மறைமுகமாக சாடிப் பேசியிருக்கிறார்.
பிள்ளைகள் உள்ள தந்தையரினால் தான் நாட்டு மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும், அதனையும் நான் நினைவுபடுத்துகின்றேன் என்று தற்போது பதவியிலிருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வாழ்க்கையினை விமர்சித்திருக்கிறார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வாழ்வியலையும், அவரின் வாரிசு தொடர்பான நிலைப்பாட்டையும் அரசியலையும் தொடர்புபடுத்தி இழிவாக மகிந்த ராஜபக்ச பேசியிருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் சாடியுள்ளனர்.
அரசியல் நகரிகம் அற்றமுறையிலான விமர்சனம் இது என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்சவின் இந்தப் பேச்சுக் குறித்து பிரதமர் ரணில் தரப்பினர் எந்தப் கருத்தினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதுவாயினும் மகிந்த ராஜபக்ச தன்னுடைய ஆட்சிக்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் முக்கியமான பொறுப்புக்களிலும் பதவிகளிலும் அமர்த்தி நாட்டை ஊழலுக்குள் இட்டுச் சென்றதோடு, நாட்டை சீனாவிடம் விற்றுத்தள்ளினார் என்றும் விமர்சனங்கள் வெளிவந்தமை நினைக்கத்தக்கவை.






