பேச்சுவார்த்தை நடத்திய ரணில்! மக்களுக்கு சேவையாற்ற முடியாத அமைச்சு பதவி வேண்டாம்

மக்களுக்கு சேவை செய்ய முடியாத அமைச்சு பதவியை வழங்க அரசாங்கம் தயாராகுமாயின் அதனை பெற்றுக்கொள்ள போவதில்லை என தீர்மானித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராதாகிருஷ்ணன்,

நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்த மலையக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சிக்கு முழுமையான ஆதரவை வழங்கியது. தற்போது அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது.

அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் நாட்டில் ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டிருந்த நேரத்தில் மலையக மக்கள் முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ரணில் விக்ரமசிங்க, புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியும் பிரதியமைச்சர் பதவியை பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமாருக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

அந்த வாக்குறுதியின் பின்னர் தற்போது புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது அதன் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனை புரிந்து நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் எமக்கு ஒரு உதவியாக கல்வி ராஜாங்க அமைச்சர் பதவியை இந்து கலாசார அமைச்சரவை அந்தஸ்தற்ற பதவியையும் மலையக மக்கள் முன்னணிக்கு வழங்குமாறும் அரவிந்த குமாருக்கு பிரதியமைச்சர் பதவியை வழங்குமாறும் கடிதம் மூலம் கோரியிருந்தோம்.

அப்போது எனக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் பதவியும் அரவிந்த குமாருக்கு பிரதியமைச்சர் பதவியையும் வழங்குவதாக பிரதமர் கூறியிருந்தார். இதற்கு நாங்கள் இணங்கினோம்.

எனினும் தற்போது எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி எனக்கு புதிய அமைச்சரவை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாகவும் பிரதியமைச்சர் பதவி தொடர்பில் எந்த பதிலும் இல்லை எனவும் தெரியவருகிறது. அப்படி நடந்தால், மலையக மக்கள் முன்னணி அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ள போவதில்லை என தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும் நாங்கள் எதிர்க்கட்சிக்கு செல்ல மாட்டோம். தொடர்ந்தும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்.

அமைச்சு பதவியை பெற்று அதில் நான் பயனடைய விரும்பவில்லை. அமைச்சு பதவியால் மக்களுக்கு சேவை செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். பணியாற்ற முடியாத அமைச்சு பதவி கிடைத்தால் அதனை ஏற்பதில்லை என தீர்மானித்துள்ளோம்.

எனினும் பிரதமர் எமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நினைக்கின்றோம். நாங்கள் அரசாங்கம் அசௌகரியத்திற்கு உள்ளாகாத வகையில், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மற்றும் பிரதியமைச்சையே நாங்கள் கோரினோம். அது முடியாது போனால், எமக்கு பதவிகள் அவசியமில்லை எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.