மாணவர்கள் விரும்பும் பாடத்தை படிக்கவிட்டால் நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என வவுனியா மாவட்ட மாணவன் துரைராஜ் யுவதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் வணிக்க பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் துரைராஜ் யுவதீஸ்வரன் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
அத்துடன் அவர் தேசிய ரீதியில் 143ஆவது இடத்தையும் பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கிராமம் ஓர் பின் தங்கிய கிராமம். எமது குடும்பமும் விவசாய குடும்பம்.
இந்த நிலையில் எனக்கு தரம் 10இல் இருந்தே வர்த்தகப் பாடம் பிடிக்கும். எனது க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேற்றை பார்த்த பலரும் கணித அல்லது விஞ்ஞான பிரிவில் கல்வி கற்குமாறு வற்புறுத்தினர்.
ஆனாலும் நான் எனது விருப்பப்படி வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று இன்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளேன்.
எம்மை போன்ற பின்தங்கிய கிராமத்தில் இருந்து சாதிக்க முடியும் என்கின்ற போது வசதி வாய்ப்புக்கள் உள்ள இடங்களில் இருப்பவர்கள் இன்னும் சாதிக்க முடியும்.
எல்லோரும் கணித பிரிவு, விஞ்ஞான பிரிவு என்று செல்லாது வர்த்தக பிரிவிலும் கல்வி கற்று இன்னும் சிறந்த சாதனைகளை செய்ய வேண்டும்.
நான் இந்த நிலையை அடைய வழிகாட்டிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.






