உலகளவில் சாதனை படைத்த மாணவிக்கு நாசா அளித்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம்

சர்வதேச அளவில் நடந்த நாசா போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மாணவி ஒருவருக்கு நாசா மிகப் பெரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி சிறந்த விண்கலம் வடிவமைப்பிற்காக குறித்த இந்திய மாணவிவை நாசாவின் சர்வதேச விண்வெளி வளர்ச்சி மாநாட்டில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பூனே நகரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தபஸ்வினி ஷர்மா என்பவருக்கே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நாசா நடத்திய சர்வதேச விண்கலம் வடிவமைக்கும் போட்டியில் தபஸ்வினி ஷர்மா பட்டம் வென்றிருந்தார்.

‘Kirithra Orbis’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் தேன்கூடு வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வடிவமைப்பே தனி நபர் விண்கல வடிவமைப்பாளர் பிரிவில் தபஸ்வினிக்கு விருதினை பெற்றுத்தந்துள்ளது.

சர்வதேச அளவில் நடந்த விண்கலம் வடிவமைக்கும் போட்டியில் 6,000 போட்டியாளர்களை வென்று இப்பட்டத்தை கைப்பற்றினார் தபஸ்வினி ஷர்மா.

இதனால் குறித்த மாணவியை அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் மாகாணத்தில் நடைபெறவிருக்கும் நாசாவின் 36ஆவது சர்வதேச விண்வெளி வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்க சிறப்பு பார்வையாளராக அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

“நாசாவின் இணையத்தள பக்கத்தை எதார்த்தமாக பார்த்தபோது இப்போட்டி குறித்து அறிந்துகொண்டேன். பள்ளியின் ஒத்துழைப்பாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் உலக அளவில் நடந்த இப்போட்டியில் முதல் பரிசு வெல்லமுடிந்தது” என தபஸ்வினி ஷர்மா தெரிவித்திருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.