தாம் எவ்விதமான பழிவாங்கல்களையும் மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களுக்கான துறை ஒதுக்கீட்டின் போது பெயர் பலகைக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட நான்கு நிறுவனங்களை ஜனாதிபதி தமக்கு வழங்கியுள்ளதாகவும் இது ஓர் பழிவாங்கல் செயற்பாடு எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல பகிரங்கமாக அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும், தாம் அவ்வாறு பழிவாங்கல்களை மேற்கொள்ளவில்லை எனவும் இது தொடர்பில் விளக்கம் அளித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா மற்றும் கம்பெரலிய ஆகிய திட்டங்களை மீளவும் அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் சுமூகமான அடிப்படையில் நடைபெற்றதாகவும் சுமார் அரை மணித்தியாலங்களே கூட்டம் நீடித்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 7ம் திகதி மீளவும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






