ஜனாதிபதியின் மனநலம் தொடர்பான வழக்கை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்ய கோரி மனு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு மனுவொன்றை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்ய பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவை தொடக்கநிலையிலேயே தள்ளுபடி செய்யக் கோரும் இடைபுகு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் இந்த இடைபுகு மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

மன நலக்கோளாறு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் அத்தியாயத்துக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக என்பது தொடர்பில் கண்டறிய மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றினை ஆரம்பித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு மேற்செல் எனும் நீதிப்பேராணை (மென்டாமுஸ் ரிட்) கட்டளையிடுமாறு மனுதாரர் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சி சார்பு ஊடகமொன்றில் பணியாற்றிய தக்சிலா ஜயவர்தனவின் சார்பில் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த நீதிப்பேராணை மனு கடந்த டிசெம்பர் 10ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்ரீமாவட்ட நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக அங்கோடை மனநல ஆய்வகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

பொலிஸ் மா அதிபருடன் கோட்டை தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் எதிர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றால் இன்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் அதனை தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் இடைபுகு மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அரசியலமைப்பின் பிரகாரம் மனநிலைக் கோளாறு உள்ள ஒருவர் ஜனாதிபதிப் பதவியில் நீடிக்க முடியாது. ஜனாதிபதிக்கு மனப் பலவீனம் அல்லது உடற் பலவீனம் உள்ளவராக உள்ளதால் அவரால் பணிகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை என சபாநாயகருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எவராவது அனுப்பி வைத்தால், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசிப் பேரின் கையொப்பதுடன் பிரதம நீதியரசரிடம் ஆலோசனையைப் பெற்று சபாநாயகர் அவரை பதவி நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.