ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாக சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பு நாளை இடம்பெறலாம் என கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதற்கு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கூட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக பணியாற்றிய சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது, தமது தொகுதிகளில் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகளை தவிர்த்து வருகின்றனர்.
சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிர கரிசனை கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு முக்கிய தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இதனால் மைத்திரிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன. இதேவேளை, சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள் தமது பதவியில் இருந்து விலகி, தனி குழுவொன்றை உருவாக்கவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.






