ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 18 பேர் சந்திரிகாவின் பின்னால் போவார்கள் என்று நான் நினைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 18 உறுப்பினர்களை தம்முடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியில் சந்திரிகா குமாரனதுங்க ஈடுபட்டு வருவதாக கொழும்பு அரசியலில் பேசப்பட்டுவரும் தகவல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன் போது கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், “சந்திரிக்கா என்னதான் செய்கின்றார் என்பதைப் பார்ப்போம். ஆனால் சுதந்திரக் கட்சியிலிருந்து 18 பேர் சந்திரிகாவின் பின்னால் போவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றால் மிகவும் சிறப்பான போட்டியை ஏற்படுத்துவார்கள். அதுவே நடக்க வேண்டும். எனினும் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேலும் பலரும் இணைகின்றனர். அதனால் பிரச்சினை பெரிதாகும்”
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொய்யுரைக்கின்றார். 8 பில்லியன் ரூபாய்களை நாம் செலவு செய்தோமாம். அவ்வாறு செலவு செய்வதற்கு ஒரு பில்லியன்கூட திறைசேரியில் இருக்கவில்லை.
நாங்கள் மக்களுக்கு வரிநிவாரணம் கொடுத்தது உண்மை. இந்த நாடு விவசாய நாடு என்பதால் உரமானியமும் வழங்கினோம். சுயபொருளாதாரத்தை ஏற்படுத்ததே எமது தேவையாகும். கடந்த அரசாங்கம் மக்களுக்கு எரிபொருள் மானியமளிக்கவில்லை.
நாங்கள் விலையை குறைத்ததை தொடர்ந்தே இவர்களும் குறைக்க ஆரம்பித்தார்கள். மக்களுக்கு பொய்கூறி தங்களது கூடையை இறுக்கிப்பிட்டித்துக் கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு கூறவிரும்புகிறேன்.
வரலாற்றில் முதற்தடவையாக ஊடகங்களின் பெயர்களைக்கூறி நாடாளுமன்றத்தில் வைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். இன்று ஒருசில ஊடகங்கள் மீதான பழிவாங்கலை ஆரம்பித்துவிட்டார்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.






