இத்தாலி, நாபோலி நகரத்தில் சேவை செய்த இலங்கை பெண் ஒருவர் தான் பணி செய்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மஹவெவ, கொஸ்வாடியே பிரதேசத்தை சேர்ந்த உமயங்கி வீரசிறி என்ற 32 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் தனது கணவருடன் நாபோலி நகரத்தில் பொலிஸிகோ பிரதேசத்தில் தங்கியிருந்து பணி செய்து வருகின்றார். இந்த பெண் பணி செய்வதற்கு வருகைத்தராமையினால் அவர் தங்கியிருந்த அறையில் சென்று வீட்டின் உரிமையாளர் பார்த்துள்ளார்.
அங்கு இலங்கை பெண் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்ததனை பார்த்த இத்தாலி பெண் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் கண்டுபிடிக்கப்பட்ட அன்று காலை குறித்த பெண்ணின் கணவர் அந்த அறையில் இருந்து செல்வதனை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். எனினும் தற்போது அவர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 8 வருடங்களாக இந்த பெண் இத்தாலியில் பணி செய்து வருகின்ற நிலையில் கடந்த வருடம் மே மாதம் திருமணம் செய்து, ஒக்ஸ்ட் மாதம் கணவருடன் அவர் இத்தாலி சென்றார் என உயிரிழந்த பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார்.
தனது சகோதரி அவரது கணவருடன் நாபோலி நகரத்தில் உள்ள வீட்டில் ஒன்றாக பணி செய்ததாகவும், சகோதரியின் மரணத்தின் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாகவும், சகோதரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த மரணம் கொலை என சந்தேகிப்பதாக நபோலி நகர பொலிஸார் தெரிவிக்கின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






