நடு வீதியில் நேரடியாக மோதிக் கொண்ட கருணா , யோகேஸ்வரன்!

அண்மையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய காரணம் என்றும் கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தினை உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு எடுத்துவரும் முயற்சியைக் கைவிடுமாறு கோரி விவசாயிகளால் இன்று செங்கலடி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இன்று அமைச்சர்களாக இருப்பவர்கள் அனைவரும் முஸ்லிம்கள், ஆளுநர்க இருப்பவரும் முஸ்லிம். இதற்கு முழுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைதான் குற்றம் சாட்ட வேண்டும்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் வெளிப்படையான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தை குழித் தோண்டி புதைத்து விட்டு இன்று அமைதியாக இருக்கின்றார்கள் என்றும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இரா.சம்பந்தனுக்கு எதிராக பேச உமக்கு அருகதை இல்லை என கருணாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறினார்.

அத்துடன், யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன பதில், நான் அவர்களின் உறவுகளை கொண்டு உமக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் எனவும் அவர் இதன் போது எச்சரித்து பேசினார்.