செல்போன் பேசிக்கொண்டே கிணற்றில் விழுந்த பெண்.. நேர்ந்த விபரீதம்!

ஈரோடு மாவட்டத்தில் செல்போன் பேசிக் கொண்டே கிணற்றில் விழுந்துவிட்ட பெண் ஒருவரை காப்பாற்ற முயன்ற இரண்டு பேரும் தண்ணீரில் தத்தளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சின்ன பிடாரியூரை சேர்ந்தவர் சங்கீதா. இவருக்கு 28 வயதாகிறது. திருமணமாகி இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். ஆனால் சங்கீதா கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதனால் மகனை காப்பாற்ற அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

செல்போனோடு விழுந்தார்
இந்நிலையில் சங்கீதா தன்னுடைய வீட்டை ஒட்டியுள்ள கிணறு அருகே நின்றுகொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி, செல்போனோடு கிணற்றில் விழுந்து விட்டார்.

நீச்சல் தெரியாமல் குதித்த நபர்கள்
இதனை கண்ட அங்கிருந்தோர் அலறிதுடிக்க, சுப்பிரமணி, கதிரேசன் ஆகியோர் உடனடியாக சங்கீதாவை காப்பாற்ற கிணற்றில் குதித்தனர். கதிரேசன் இளைஞர் என்றாலும் சுப்பிரமணி என்பவருக்கு 60 வயதாகிறது. எனினும் இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் கிணற்றில் குதித்துவிட்டனர்.

கிணற்றில் மூவர் தத்தளிப்பு
ஆனால் கிணற்றில் படிகள் எதுவும் இல்லை. அதனால் சங்கீதாவை காப்பாற்றியும் மேல கொண்டு வர முடியவில்லை. இதனால் 3 பேருமே கிணற்று நீரில் தத்தளித்தபடியே இருந்தனர். உடனே பகுதி மக்களும் என்ன செய்வதென்று தெரியாமல், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த வீரர்கள், கிணற்று தண்ணீரில் தத்தளித்து தவித்து கிடந்த 3 பேரையும் கயிறுகட்டி மேலே பத்திரமாக மீட்டு கொண்டனர். கிணற்றில் விழுந்ததால், 3 பேருக்குமே பலமான அடி ஏற்பட்டது. இதனையடுத்து மீட்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.